செவ்வாய், 9 ஜூன், 2009

அவள் அப்படித்தான்!" (7)


எங்கே வாழ்க்கை தொடங்கும்!அது
எங்கே எவ்விதம் முடியும்!
இதுதான் பாதை!இதுதான் பயணம்!
என்பது யாருக்கும் தெரியாது!

பாதையெலாம் மாறிவரும்!
பயணம் முடிந்துவிடும்!
மாறுவதைப் புரிந்துகொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்!

----------------கவியரசு கண்ணதாஸன்....
அந்தக் குரலைக் கேட்டதும்...
அத்தனை கண்களும் ஆச்சரியத்தில்....

சட்டென்று பாய்ந்துசென்று
அவள் கைகளைப்பற்றிக் கொண்டு
கண்களில் நீர் நிறைந்த வழிந்தோட..
வார்த்தைகள் தட்டுத்தடுமாறிட...

தாய்மையின் கனிவோடு தழுவி
அணைத்துக்கொண்டது அந்தத் தந்தை உள்ளம்!

தன் கண்களையே நம்ப முடியாது
ஆச்சரியத்தோடு அசையாமல்...
'நடப்பது கனவா....நனவா.'..என்ற நிலைபுரியாது
குளம்பி நின்ற டாக்டர் காண்டீபனைக்
கேள்விக்குறியோடு பார்த்துக்கொண்டிருந்தாள் நர்ஸ் சித்திரா!

'இப்படியும் நடக்குமா.'...
'எப்படி...எப்படி.'...
'இனிக் கண்கள் திறப்பதற்கோ...
உதடு திறந்து பேசுவதற்கோ...
சந்தர்ப்பம் இல்லாதவள்.'...

'அதையும் தாண்டி...
"இல்லாதது."...என்று சொல்லும் வண்ணம்...
இருக்கவேண்டிய அவளின் நிலையில்
இப்படி ஒரு மாற்றமா!...

'விஞ்ஞானம் கரைகண்ட
இருபத்தோராம் நூற்றாண்டில்....
இப்படி ஒரு அதிசயமா.'...

பகுத்தறிவு மேதைகள்
'தாங்களே சிருஷ்டிகர்த்தாக்கள்!' என்று
உலகத்தைப் பார்த்து
எகத்தாளமாக நடைபோடுகையில்...
இப்படி ஒரு அதிசயமா.'...

காண்டீபனுக்குக்கூட...
கடவுள் நம்பிக்கை தள்ளாடிய நிலையில்...
'கடவுள் இருக்கிறானா...இல்லையா.'..
என்பதில் 'இல்லை' என்கிறவரைக்கு
ஊர்ஜிதமாய்க்கூறுகின்ற வரையில் இல்லாவிட்டாலும்...

தொண்ணூற்றொன்பது புள்ளி ஒன்பது ஒன்பது வீதம்...
'இல்லை.'..என்ற முடிவுக்கு மனதில் வேரூன்றிவிட்ட
கடவுள்வாதக்கொள்கையில்.....

'நித்தியா.....அவள் முடிவு நிட்சயமாகிய
அசைக்கமுடியாத நம்பிக்கைக்கு...
இடியா...இல்லை மீளாய்வுக்கு வழியா...என்று
சொல்கிற நிலையில்...
இப்படி ஒரு திருப்பமா.'....

ஆச்சரியத்தோடு அசையாது நின்றவனை..
"டாக்டர்."..என்ற நர்ஸ் சித்திராவின் குரல்
சுயநிலைக்கு கொண்டுவந்தது!

தந்தையின் பாசப்பிடிக்குள் கட்டுண்ட நிலையில்
இருந்த நித்தியாவை.....

"நீங்கள் மறுபிறவி எடுத்திருக்கிறீர்கள் நித்தியா!
நம்பமுடியாமல் இருக்கிறது நீங்கள் பேசுவது...
அப்பாவின் அன்பு உங்களைக்காப்பாற்றியிருக்கிறது நித்தியா...
அதைவிட வேறொன்றும் சொல்லத்தெரியவில்லை"....

அவள் கையைப்பிடித்துப் பள்ஸைப் பார்த்தார்...
'ஓ..வாட் எ சர்ப்பிறைஸ்...
இற்ஸ் நோர்மல்...
ஐ கான்ட்ற் பிலீவ்..'..

'சித்திரா....அவங்க பிளட் ரெஸ்ட் றிப்போட்டை
எடுத்திட்டு வாங்க றூமுக்கு"..என்று கூறிவிட்டு..

"உண்மையில் நீங்கள் அதிர்ஷ்டம் உள்ளவர்...
உங்கள் பிள்ளை மறுபிறவி பெற்று வந்திருக்கிறா!
நீங்கள் இனி எதுக்கும் பயப்படத் தேவையில்லை."..

"நித்தியா! உங்கள் அப்பாவோடு பேசிக்கொண்டிருங்க...
சாப்பிட ஏதும் வேண்டுமா..
கோப்பி ரீ எதுவேணுமென்றாலும் சொல்லுங்க...
நான் அனுப்பிவைக்க ஏற்பாடு செய்கிறேன்..
தைரியமாய் இருங்க."..
என்று ஆறுதல் கூறியபடி...

"சித்திரா! அவங்க என்ன கேட்கிறாங்களோ கொடுங்க..
அவங்க அப்பாவுக்கும் கேட்டு வாங்கிக் கொடுங்க"...
என்று கூறிக்கொண்டே...

தொலைபேசியை எடுத்து
வேகமாக இலக்கங்களை சுழட்டினார்...

சற்று நேரத்துக்கெல்லாம் மற்றைய இரு டாக்டர்களும்
வேகமாக அறைக்குள் வந்திருந்தார்கள்!

"வாட் எ சர்ப்பிறைஸ்...அண்பிலீவ்வபிள்!
வாட் டூ யூ திங் மிஸ்ற்ர காண்டீபன்!
சம்திங் எச்செப்ஸ்ஸன் ஓவர் அஸ்!"

'நேரமும் கணித்து நாம் எடுத்த முடிவு எப்படி..
இயற்கையின் நியதியா..இல்லை....
இறைவன் என்றொரு சக்திபற்றிப்
பேசுகிறார்களே அதுவா."...

'எதுவாய் இருந்தாலும் நித்தியா பிழைத்துவிட்டாள்...
நீண்டகாலமாக முற்றிய நிலையில் இருந்த ஒரு
கொடிய வியாதியில் இருந்து...
அவள் மீண்டுவிட்டாள்.'.
என்றுதான் சொல்லவேண்டும்...

யாரிடமும் சொல்லாமலே...
அவளாலே உணரப்பட முடியாத
வியாதியில் இருந்து அவள் மீண்டுவிட்டாள்...
என்பதுமட்டும் நிஜமாகியது!

காண்டீபனுக்கு புரியமுடியாத ஒரு புதிராகவே
நித்தியா காணப்பட்டாள்!
ஏதோ ஒன்று அவனையும் மீறி அவளோடு
'பேசு! பேசு!' என்றது!

மற்றைய டாக்டர்கள் விடைபெற்றுச் சென்றவுடன்
'நித்தியா இப்போ எப்படி இருக்கிறாள்'
என்று பார்ப்பதற்குச் சென்றுகொண்டிருந்தவனை....

வாசலில் நின்றுகொண்டிருந்த வஸந்த் மறித்துக்கொண்டான்..

"டாக்டர் இங்கை நித்தியா என்று ஒரு பேஸன்ட்ற்."..
என்று இழுத்தான்!...
"யேஸ் கமோன்! என்று கூட்டிச்செல்கையில்...

'இவன் யாரப்பா இந்த நேரத்தில்...
யாராவது உறவுக்காரனாய் இருப்பானோ...
எதுவாக இருந்தாலும் இருந்திட்டுப்போகட்டுமே! உனக்கென்ன!'
என்றது அவனது உள்மனம்!

சட்டென்று 'ச் சா...அப்படி ஏதும் இருக்கக்கூடாது'...
என்று மனம் ஏதோ ஒன்றுக்காக அவஸ்தைப்பட்டது!
சட்டென்று ஏதோ நினைத்தவன்!

'நீங்க இங்கை இருங்க...
நான் அவங்களைப்பார்த்திட்டு வந்து
உங்களைக் கூப்பிடுகிறேனே..ப்பிளீஸ!';
என்று கூறிவிட்டு..
அவனுடைய பதிலை எதிர்பாராமலே
வேகவேகமாக உள்நுழைந்தான்...

நித்தியா படுக்கையில் சற்று
சாய்ந்தபடி விட்டத்தைப்பார்த்தபடி
ஏதோ யோசனையில் இருப்பதைக்கண்டான்!

"ஹாய் நித்தியா! எப்படி இருக்கிறீங்க!
ஏதாவது சாப்பிட்டீங்களா!" என்று
அவள் கையைப்பிடித்து
பள்ஸ்ஸை பார்த்தான்! நோர்மல்....

" நீங்கள் ....
நீங்கள்...உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது நித்தியா...
நீங்கள் பிழைத்துக்கொண்டது.
.எங்கள் எல்லோருக்கும் ஆச்சரியம்தான்..
உங்களை அந்தநோய் முற்றாகவே பற்றிப்பிடித்து முற்றியிருந்ததை
நம்மால் பார்க்கக்கூடியதாய் இருந்தது!ஆனால்"....

"ஆமா! உங்களுக்குக் கடவுள்
நம்பிக்கை எல்லாம் இருக்கிறதா!"
என்று அவள் கண்களை ஆழமாக
ஊடுருவிப்பார்த்தவண்ணம் கேட்டான்!

அந்தக்கண்களில் ஏதோ ஒரு காந்தவிசையீர்ப்பு
அவன் இதயத்துள் ஏதேதோ பேசியது...

அந்தப்பார்வை அவளுக்குள்ளும்
ஓர் மின்னலை ஏற்படுத்தியதும் உண்மைதான்!
என்பதை அந்தக்கணம் அவள்மனம் உணர்ந்தாலும் ...

சட்டென்று நிதானத்துக்கு வந்தவளாய்....

"ஆமாம்...எனக்கு அம்மா கிடையாது!
சின்னவயசில் இருந்து அப்பாதான் எல்லாம்...
அவருக்கும் கடவுள் நம்பிக்கை நிறையவுண்டு!
எனக்கும் நிறையவே உண்டு!..
ஏன் கேட்கிறீங்க டாக்டர்" என்றாள் அவள்!..

"உண்மையில் எனக்கு அவ்வளவாக
கடவுள் என்று ஒருவர் இருப்பதே
போலியானது! என்றே...

உங்களுடைய இந்தநிலை
மாற்றம்வரும்வரை இருந்தது உண்மைதான்...
பேஸன்ற்ஸை நம்பிக்கை ஊட்டுவதற்காக
அவ்வப்போது அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக
ஆறுதலுக்காக கூறுவதுண்டு...

ஆனால்..இப்போது......
அந்த நிலையையே..
அடியோடு சாய்த்துவிட்டீர்கள் நீங்கள் நித்தியா!"
என்றான் அவன்...

"என்னவோ தெரியலை!
உங்களோடு நிறையப் பேசவேண்டும்போலிருக்கிறது....
எனிவே....
உங்களைப்பார்க்க யாரோ வஸந்த்
என்று ஒருவர் வாசலில் காத்துக்கொண்டிருக்கிறார்....
அவரை அனுப்பிவைக்கட்டுமா நித்தியா"..என்றான்.

"வஸந்த்த்..............
வேண்டாம் டாக்டர்...
அப்புறமாய்ப் பார்க்கலாம் அவரை...
ஏதாவது சொல்லி அவரை வெளியில் அனுப்பிவிடுங்கள்"
என்றாள் அவள்!

"அவள் அப்படித்தான்" ("வளருவாள்!")

அன்புடன்
ஆதித்ததாஸன்

அவள் அப்படித்தான்!" (6)


"போய்வருகிறேன்!" என்றது வார்த்தை!

"உள்ளே உறங்கிக் கிடப்பதை விட
வெளியே உலவிக் கொண்டிருப்பது நல்லதுதான்!
புறப்படு!" என்றது உதடு!

"உள்ளுக்குள் இருந்தவரைக்கும் கவலை இல்லை!
வெளியே போனால் விமர்சனங்கள் வரும்!"

"விமர்சனங்கள் இல்லாது வாழ்க்கை ஏது!
கவலைப் படாதே!"

"எப்போது வந்தாலும் எனக்கு இடம் கொடுப்பாய் அல்லவா!"
என்று உதட்டைப் பார்த்து உறுதி மொழி கேட்டது வார்த்தை!

"ஒரே ஒரு சமயத்தில் மட்டும்
உனக்கு இடம் கொடுக்க முடியாது!"
என்னை நீ அப்போது தவறாகக் கருதக்கூடாது!"

"எப்போது!"

"என்னுடைய இரண்டு உதடுகளை
இன்னொருவருடைய உதடுகள் சந்திக்கும்போது!"

---------------கவிஞர் மு மேத்தா------------
உறங்கிக் கொண்டிருக்கும் உதடுகள்
மெல்ல முனகியது!
"தண்ணீர்! தண்ணீர்! தண்ணீர்தாங்கோ!'
என்ற முனகல்கேட்டு நர்ஸ் ஓடிவந்தாள்!

கண்கள் மூடிய நிலையில்
வாடிய மலராய் துவண்டுபோய்க் கிடந்த
நித்தியாவைப் பார்த்து......

'ச்..சே...இப்படி ஒரு பெண்ணுக்கு இந்த நிலையா!'
ஓடிச்சென்று தண்ணீர் எடுத்து வந்து
அவள் உதடுகளை மெல்ல நீக்கி
சிறு சிறு துளியாக விட்டுக்கொண்டாள் நர்ஸ்!

சற்று நேரத்துக்கெல்லாம் அவளின்
முனகல் அமைதி கண்டது!
இந்தச் சின்ன வயதில் இப்படி
ஒரு நோய் இவளை எப்படி நெருங்கிக்
கொண்டது!

'இந்த அழகுச் சிலைக்கு இந்தத் தீர்ப்பை எழுத
எப்படித்தான் இறைவனுக்கு மனசு வந்தது!'

'பருவ வயது அநுபவிக்கக் காத்திருக்கும் இன்பங்கள்
அவளை விட்டு இவ்வளவு தூரம் விலகிச்செல்ல
விதியே நீ செய்து கொண்ட ஒப்பந்தம் தான் என்ன!'

'உன் சதிக்கு இவள்தான் கிடைத்தாளா!
இவளை ஏன் பலியாக்க நினைக்கிறாய்!
பார்! அந்த பருவநிலா செய்த தவறுதான் என்ன!
பார்த்தவர்கள் கண்படும் அழகு!
இப்படித் துவண்டு கிடக்கிறதே!'

'தேவனே! உன் தீர்ப்பை மாற்று!
அவளை வாழவை!' என்று
மன்றாட்டமாய்க் கெஞ்சியது அந்த நர்ஸ்ஸின் மனம்!

தீர்ப்புக்கள் திருத்தப்படுமா!
திருத்தி எழுதப்படுமா!
முடிகிற காரியமா! இது!

ஒன்றுக்கு மூன்று வைத்தியர்கள்
கூடித்தீர்மானித்து முடிவெடுத்துவிட்டார்களே!
இனித்தெய்வத்தாலும் முடியாது!
என்று நேரம் கணித்துவிட்டார்களே!

இன்னும் எட்டு மணித்தியாலங்கள்!
அத்தோடு அவள் உயிர் விடைபெற்றுவிடுமா!
இறைவா என்ன இது சோதனை!'
என்ற யோசனையோடு மூழ்கியிருந்தவளை...

'மிஸ் சித்திரா!
இப்போ அந்தப் பேஸன்ற்ரின் அப்பாவை மட்டும்
உள்ளே அழைத்துவாங்க!"..
என்ற டாக்டர் காண்டீபனின் குரல் கேட்டு
திடுக்கிட்டவள்....

"தண்ணீர் கேட்டு முனகினா டாக்டர்!
கொஞ்ச ட்றொப்ஸ் விட்டிருக்கிறேன்!
மற்றும்படி கண்முழிக்கவே இல்லை!
என்று கூறிக்கொண்டே வெளியில் போக முனைந்தவளை..

"மிஸ் சித்திரா! வண்மினிட்!
அவருக்கு எதுவுமே கூறாமல்
கூட்டியிட்டு வாங்க! றைட்!...என்றார் காண்டீபன்!
"சரி டாக்டர்"....என்று கதவைத்திறந்தாள் சித்திரா...

அங்கே தந்தை கண்களில்
தாரை தாரையாக நீர் வழிந்தோட....
அவரைச்சுற்றி ஒரு கூட்டம்...
அதில் அருணா அவரைத்தாங்கிப்பிடித்தபடி..
ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தாள்!

கதவுதிறந்து கொண்டதும்
அடக்கிவைத்திருந்த
அத்தனைதுயரமும் பீறிட்டுக்கொண்டு வெளிவர.....

" ஐயோ என் மகளுக்கு என்னாச்சு!"
என்று அவர் கத்திய சத்தம்....
அந்த நர்ஸ்ஸிங்ஹோமையே ஓர் உலுக்கு உலுக்கியது!

அவர் சித்திராவையும் தள்ளிக்கொண்டு
உள்ளே வந்த வேகத்தை
டாக்டர் காண்டீபனால்கூட கட்டுப்படுத்த
முடியாமல் போய்விட்டது!

தன் பலம்கொண்ட மட்டும் தாங்கிப்பிடிக்க
முயற்சிசெய்த காண்டீபனால்...
அது முடியாமற்போகவே...
அவர்போக்கிலேயே அவரை விட்டுவிட்டார்...

"ஐயோ என் மகளே!
உனக்கு என்னம்மா நடந்தது...
ஐயோ நான் சொன்னேனே...நீ கேட்டீயா!
உன்னை இந்தக்கோலத்தில்
பார்ப்பதற்காடி! பாவி! பாவி!
உன் அம்மா புண்ணியஞ் செய்தவளடி!
போயிட்டாள் புண்ணியவதி!...நான் உன்னை இந்தக்கோலத்தில்
பார்க்கவா இதுவரைகாலமும் காத்திருந்தேன்".....

"டாக்டர்! என் பொண்ணுக்கு என்ன டாக்டர்..
என்ன நடந்தது டாக்டர்..
எல்லா இடத்தாலையும் வயர் கொழுவி விட்டிருக்கிறீங்கள்!
என்ன டாக்டர்! அவளுக்கு என்ன"...

தலையில் அடித்துக்கொண்ட
அந்தத் தந்தையின் நிலையைப் பார்க்க காண்டீபனுக்கு
எப்படி அவரைத் தேற்றுவது என்று புரியவில்லை....

பாசம்! எத்துணை தூரம் கொடுமையானது...
வேஷம் நிறைந்த உலகத்தில் பாசம் இன்னும்
சில இடங்களில் பார்க்கக் கூடியதாகத்தானே இருக்கிறது!

அமைதிக்கு ஆறுதலுக்குக் உடந்தையாக இருக்கிற
பாசம் வேஷமாகிப்போனாலும் துயரந்தான்!
அதுவே அளவுக்கு மீறிவிட்டால் அதுவும் துயரந்தான்!

'அந்தத் தந்தைக்கு எவ்வாறு எடுத்துச்சொல்வது'
என்று காண்டீபனுக்கு ஒன்றும் புரியவில்லை....
அவரைக் கைத்தாங்கலாப் பிடித்து
அருகிலிருந்த கதிரையில் அமர வைத்தான்!

அவரின் இருகைகளும் தன்னை இறைஞ்சுவதை
அவனால் உணரமுடீந்தது! தன் தந்தையின் நிலையில்
அவரை அவனால் பார்க்க முடிந்தது!

எதற்கும் எளிதில் கலங்காத அவனின் கண்கள்
அந்தத் தந்தைக்கு தான் சொல்லப்போகும் செய்தியை
அவரால் எப்படித்தாங்கிக்க முடியப்போகிறது
என்பதை எண்ணிப்பார்க்க....

அவனையும் மீறி அவன்கண்களில் இருந்து
இரண்டுதுளிநீர் அந்தத்தந்தையின் கையை நனைத்தது!

தன்னைத் தெய்வமாகப் பார்க்கும்
தந்தைக்கு தான் என்ன சொல்வது என்று
புரியாமல் சில கணப்பொழுதுகளைக் கழித்துவிட்டான்..

'ஒன்றும் இல்லை ஐயா!
உங்க பொண்ணைக் கடவுள் கைவிடமாட்டான்!
தைரியமாக இருங்கள்!

என்று அவனை மீறி
அவன் வார்த்தைகள்வெளிவந்தன!...
'உண்மையைச் சொல்லித் தைரியப்படுத்துவோம';
என்று நினைத்தவனின்
மனதில் அவனையும் மீறி வந்த வார்த்தைகள்......

அப்பா! அப்பா!இங்கை வாங்கப்பா....
என்ற குரல்கேட்கவும்....

"அவள் அப்படித்தான்!" (வளருவாள்)

நன்றி!

அன்புடன்
ஆதித்ததாஸன்
பி.கு
(கதையில் இடம்பெறும் பாத்திரங்களின் பெயர்கள் யாவும் கற்பனையே!
கதை நிஜ நிழல் இணைந்தவையே! கதை என்றால் ஜதார்த்தங்களுடன்
கற்பனையும் இணைந்திருக்கவேண்டும் என்பது என் எண்ணம்!)

"அவள் அப்படித்தான்!" (5)


ஒரு குறுகலான பாலம்!
நன்றாகக் குளித்துவிட்டு
நெற்றியில் வீபூதிப் பூச்சோடு
அந்தப்பாலத்தில் வந்துகொண்டிருக்கிறது ஒரு யானை!
எதிரிலே அசிங்கமாக வந்து கொண்டிருக்கிறது ஒரு பன்றி!

பன்றி வாலை ஆட்டிக்கொண்டு
கம்பீரமாக வருகின்ற வேகத்தில்
சக்திவாய்ந்த யானைக்கு கோபம் வரவில்லை!
அது ஒதுங்கிநின்று வழி விடுகிறது!

பன்றிக்கோ தான் வெற்றி பெற்றுவிட்டதாக நினைவு!
யானையே தனக்குப்பயந்து விட்டதாக ஒரு கனவு!
ஆனால் யானையினுடைய நினைவோ
"பாவம் பன்றி விட்டுவிடுவோம்" என்பதாகும்!

------ கிருபானந்தவாரியார்------(அர்த்தமுள்ள இந்துமதம் கண்ணதாஸன்)
அந்தக் கன்டீனுக்குள் வஸந்த் நுழைந்ததும்......
அவனை முதலில் கண்டவள் அருணாதான்!

"வா! வஸந்த் வா!
நித்தியா! வஸந்த்!
இவர்தான் நீ மயங்கி விழுந்தபோது தண்ணீர்
எடுத்துவந்து உன் மயக்கம் தெளிவித்தவர்!
வஸந்த்! நித்தியா! மை கிளாஸ்மேட்!"

"ஓ யேஸ்! ஐ நோ ஹெர்! "...

"யேஸ் நித்தியா! ஐ நோ யூ!
பட் யூ டோன்ற் நோ எபவுற் மீ!'

"வட் எ சர்ப்பிறைஸ் வஸந்த்!
யூ நோ ஹெர்...
ஸோ.. வை டிட் யூ லீவ் வ்வுறம் ஹெர் ஒன் தற் ரைம்."..

"ஸொறி அருணா!
ஐ ஹாட் ரு டூ ஸம்திங்! தற்ஸ்வை!"

"ஓ! றியலி! எனிவே நித்தியா!
யூ றியலி அண்லக்கி வ்வெலோ!
இனி ஓரே அறுவைதான் உங்களுக்கு நித்தியா!
வஸந்த்தோடை பேச ஆரம்பிச்சுட்டீங்கள்னா அவ்வளவுதான்!

என்ன வஸந்த்!
ஆம் ஐ றைற்!"...
.என்று சொல்லிச் சிரித்தாள் அருணா!

நித்தியாவுக்கு
'என்ன நடக்கிறது' என்று ஒன்றுமே புரியவில்லை!
'இவன் என்னைத் தெரியும் என்கிறான்!
அவளோ என்னைக்கிண்டல் பண்ணுகிறாள்!
என்ன நடக்கிறது இறைவா இங்கே!'

'இவன் பறட்டைத்தலையும் தாடியும்
அசல் றைளடியாகக் காட்டுது!
அதைவிடச் விஷமச்சிரிப்புவேறை
அடிவயிற்றைக்கலக்குது!

அதைவிட அருணா பேச்சுவேற
இவனைப்பற்றிக் கிண்டலாக இருக்குது!
என்ன இறைவா!
சோதனைகளுக்கு முடிவு வரும்!
விடியலைக் காட்டும்! என்று
நம்பிக்கையோடு கல்லூரிக்கு வர.....

சோதனைகளின் தொடர்வு தொடரும்!
என்றல்லவா நிகழ்வு காட்டுகிறது!
அம்மா! எனக்கு ஒன்றுமே புரியவில்லை!
நீதான் அம்மா எனக்கு வழிகாட்டு!'
என்று சிந்தனையில் ஆழ்ந்தவளை.....

"என்ன நித்தியா!
ஒரு தாங்ஸ்கூடக் கிடையாதா!" என்று
அவள் உடலைக் கண்கள் விழுங்க
வார்த்தைகளில் விஷமம் வளர்த்தான் அவன்!

"ஓ! தாங்ஸ்! ஸொறி!" என்றாள் அவள்!

"என்ன...
தாங்ஸ்ஸோடை ஸொறியும் சேர்ந்துவருகுதே!
கொஞ்சம் ஹப்பியாகச் சொல்லக்கூடாதா...
ஏதோ வேண்டப்படாதவனைப் பார்த்தமாதிரியல்லோ
உங்கள் முகம் காட்டுகிறது!
என்னைப்பார்க்கிற எல்லோருக்கும்
அப்படித்தான் தெரியுது!
அருணாவைத்தவிர....

எனிவே யூ ஆர் லக்கி!
யூ ஹாவ் அருணாஸ் வ்றெண்ஸிப்!
ஹீப்பிற்றப்..ஹீப்பிற்றப்!"...என்றான்!....

'இவன் என்னை நிஜமாக வாழ்த்துகிறானா!
இல்லை வைகிறானா...
ஒன்றுமே புரியவில்லையே!
அப்பா நீங்கள் சொன்னதுபோல்
இந்தக்கல்லூரிக்கு வந்தது தப்போ அப்பா.'..

என்று தன்தந்தையை
மனதாரக் கேட்டுக்கொண்டாள்!

'நான் நல்லதைத்தானப்பா நினைக்கிறேன்!
எனக்கு ஏனப்பா இப்படிநடக்கிறது!
பிறந்தபோது அம்மாவை இழந்தவள்!
பிறப்பிலேயே நான் அதிர்ஷ்டம் இல்லாதளாய்
ஆகிவிட்டேனே அப்பா!

அருணாவைச்சந்தித்த மகிழ்ச்சியும்
இவனைச் சந்தித்த கணத்தில்
தொலைந்துபோய்விட்டதே...
எனக்காக கடவுளை வேண்டிக்கொள்ளுங்கப்பா!'
என்று மனதார மன்றாடினாள் அவள்....

"பை த வே வஸந்த்!
நித்தியாவை எப்படி உங்களுக்குத் தெரியும்
என்று சொல்லவில்லையே."..என்று அருணா கேட்கவும்...

"தற்ஸ் ஸஸ்பென்ஸ் அருணா...
வெயிட் ற்றில் கிளைமேக்ஸ்."...

"வாட்! இற்ஸ் எ வ்விலிம் ஸ்ரோறி....
அதுகூட வ்வில்ம் ஸ்ராட்டிலேயே
தெரிந்திடுமே...இது என்ன ஸஸ்பென்ஸ் வஸந்த்!"

"யேஸ் அருணா!
ஐ கான்ட்ற் ற்றெல் நௌவ்!ஸொறி."..
என்றான் அவன்!

நித்தியாவுக்கு அடிவயிறு கலக்கியது!
ஓர் இனம்புரியாத பயம் கௌவ
"அருணா பாத்றூம் எங்கே இருக்கிறது!"என்று கேட்டாள்!

அவள் நிலையைப் பார்க்க
அருணாவுக்கும் பதட்டமாக இருந்தது!
"என்ன நித்தியா! எனிஹெல்ப்."..என்றுகேட்டாள்!
வேண்டாம் அருணா! ஜஸ்ட்....

"ஓகே! ஓகே!..அதோ அங்கே
றைட்டில திரும்பி லெவ்ற்றில இருக்கு!" என்று
கைகாட்டினாள்!....

நித்தியா சென்றதும்.....
"வஸந்த் ற்ரெல் ப்பிளீஸ்!
கைள டூ யூ நோ நித்தியா!
யூ ஆர் எனி றிலேஸன்ஸ்!"...

"நோ வே அருணா!
ஐ கான்ட்ற் ரெல் நௌவ்!
ஸொறி...எனக்கு ரைமாச்சு!
ஸீ யூ லேட்டர்.".
.என்று விரைவாக கிளம்பினான் அவன்...

'என்னது!
இவன் இப்படி சர்ப்பிறைஸ் பண்ணுறானே!'...
என்று குளம்புகையில்
நித்தியாவின் நினைப்பு வர...

'என்ன இன்னும் காணோமே...
பாத்றூம்போன நித்தியாக்கு என்னாச்சு..'
என்று எண்ணியவாறு விரைந்து சென்று கதவைத்தட்டினாள்!

சத்தத்தைக்காணோம்...
பலமாகத்தட்டினாள்..சத்தமில்லை!...
கத்தினாள்! "ப்பிளீஸ் ஓடிவாங்கோ."...
என்று பலமாகக்கத்தினாள்!..

அவள் கத்தலைக் கேட்டு
கண்டீன் ஆள் ஓருவன் ஓடிவந்தான்!..

வந்தவன் நிலைமை தெரிந்து
காலால் ஓங்கி ஓர் உதைவிட....
கதவு உடைந்து திறந்துகொண்டது! ..
அங்கு நித்தியா உடல்வெயர்த்து மயக்கமாய்க் கிடந்தாள்...

"அவள் அப்படித்தான்!" தொடர்வாள்!

அன்புடன்
ஆதித்ததாஸன்
பி.கு
(கதையில் இடம்பெறும் பாத்திரங்களின் பெயர்கள் யாவும் கற்பனையே!
கதை நிஜ நிழல் இணைந்தவையே! கதை என்றால் ஜதார்த்தங்களுடன்
கற்பனையும் இணைந்திருக்கவேண்டும் என்பது என் எண்ணம்!)

அவள் அப்படித்தான்!" (4)


எங்கேயோ சந்தித்தோம் நம்மைப்பற்றி
எப்படியோ சிந்தித்தோம்!பாடுகின்ற
சங்கீதப் பறவைகளாய் வாழ்ந்தோம் பின்னர்
சரித்திரத்தின் பக்கங்களாய்ப் புரட்டப்பட்டோம்!
இங்கேதான் இங்கேதான் இந்த மண்ணில்
இருக்கின்றோம் இன்றைக்கும்!எனினும் என்றன்
சிங்காரத் தேன்குயிலே நீயும் நானும்
திசைமாறிப் போய்விட்டோம் பிரிந்துவிட்டோம்!

.......கவிஞர் மு மேத்தா


அப்படியே ஸ்தம்பித்து நின்றவளைத்
தாங்கிப்பிடித்தபடி பார்க்கையில்...
அங்கு வஸந்த் நின்று கொண்டிருந்தான்!
"வஸந்த் ப்பிளீஸ் பிறிங் தி வாட்டர் குவிக்!" என்று
கத்தினாள்!

வஸந்த் ஓடிச்சென்று இரண்டு கைகளிலும்
தண்ணீரை ஏந்திவந்து நித்தியாவின் முகத்தில் தெளித்தான்!
வெயர்த்திருந்த அவள் முகத்தில் தண்ணீர்பட்டவுடன்
நித்தியா சற்று கண்களை விழித்துப்பார்க்க எத்தனித்தாள்!
தனக்குள் ஏதேதோ முணுமுணுத்தாள்!

அருணாவுக்கு ஒன்றும் புரியவில்லை...
பக்கத்தில் இருந்த மரத்தடிக்கு மெதுவாக
தாங்கிப்பிடித்தபடி அவளை இழுத்துச் சென்று
தன்மடியில் படுக்கவைத்து தன் கைகளால்
அவளின் முகத்தை வருடித் தலையை
கோதிவிட்டுக்கொண்டிருந்தாள்!

இதற்கிடையில் அங்கு பெரிய கூட்டமே கூடிவிட்டது!
"வாட் ஹப்பிண்ட் அருணா!" என்று அங்கிருந்த
பலகுரல்களின் ஏகோபித்த சத்தம்!
அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று
தெரியவில்லை! அவளுக்கே தெரிந்திராதபோது அவள்
என்ன சொல்வாள்!

சற்றுநேரத்திற்கெல்லாம் நித்தியா
கண்களை மெல்லத்திறந்தாள்!
தன்னைச் சுற்றிலும் ஒரே கூட்டம்!
"என்ன நடந்தது" தனக்கு
என்று அவளால் சட்டென்று உணரமுடியவில்லை!

அருணாவின் மடியில்
தான் படுத்திருப்பதை உணர்ந்து
கொண்டதும் சட்டென்று எழுந்து கொண்டாள்!
அவள் எழுந்ததும் சூழ நின்ற கூட்டம் சற்று
விலகிக்கொள்ள "என்ன நடந்தது அருணா!" என்று
மிகவும் பதட்டமாக கேட்டாள்!

"ஒன்றுமில்லை நித்தியா!
சட்டென்று மயக்கம்போட்டு விழப்பார்த்தீங்க!
நான் உங்களைத் தாங்கிப்பிடித்திட்டேன்!
வேறு ஒன்றுமில்லை!" என்றாள் அவள்!

நித்தியா சற்று மெல்ல மெல்ல
நிதானத்திற்கு வந்தவளாய்....
'யார் அவன்! யார் அவன்!....
அவன் ஏன் என்னைத்தொடரவேணும்!
என்ன காரணம்! அவன் எங்கே....அவன் எங்கே"....என்று
அந்தக்கூட்டத்தில் தன்கண்ணில் பட்டவனைத்தேடினாள்!

சற்று தொலைவில்
அவன் நடந்துபோவதை அவளால்
பார்க்க முடிந்தது! அவளின் கேள்வி அவளுக்குள்ளே
தொடர்ந்து ஒலித்தவண்ணமே இருந்தது!

அன்று காலையில் வழிமறித்த அதே அவன்தான்....
தன் பெயர்கூறி அழைத்த அதே அவன்தான்....
"யார் அவன்....யார் அவன்"...என்ற சிந்தனைக்குள்
மூழ்குகையில்....

"நித்தியா! வாட்ஸ் றோங் வித் யூ!
ஹெடேக்"...என்று பரிவோடு வருடியபடி கேட்ட
அருணாவிற்கு சட்டென்று நித்தியாவால் பதில்
சொல்ல முடியவில்லை!....

"ஒன்றுமில்லை.....சற்றுத் தலைப்பாரமாக இருக்கிறது!
அவ்வளவுதான்...வேறொன்றுமில்லை!" என்று
மறைத்துக் கொண்டாள்....

"உவைய்...ஐஸ்கிறீம் ஒத்துவரல்லையா நித்தியா...
ஐ திங் யூ நீட் றெஸ்ற்....ப்பிளீஸ்...கமோன்..."
என்று தன்னோடு தாங்கியபடி மெதுவாக
அவளை அழைத்துச்சென்று கன்டீனில் இருக்கவைத்து
கோப்பி வாங்கிக் கொடுத்தாள்....

"அருணா! நன்றி அருணா! தாங்யூ வெரிமச்....
உங்கள் அன்பு என்னை எங்கோ அழைத்துச்செல்கிறது!
என் அம்மா இருந்தால் இப்படி இருந்திருப்பாவோ..
எனக்குச்சொல்லத் தெரியல்லை! ஆனால்
எனக்குப் புதுமையாகவும் மகிழ்ச்சியாகவும்
இருக்கு அருணா! இது என்றும் நிலைத்திருக்கவேண்டும் அருணா!"

"நித்தியா ப்பிளீஸ்....
என்றும் இது நிலைக்கும் டோன்ற் வொறி!
ஆர் யூ ஓகே...நௌவ்!" என்று அன்போடு
அவள் தலையை வருடினாள்!

என்ன நினைத்தாளோ...
சட்டென்று அவளைக் கட்டிப்பிடித்து
நெற்றியில் முத்தமிட்டாள்! கண்களில் நீர்ப்பெருக்கெடுத்தது!
நித்தியாவின் கண்கள் மட்டுமல்ல!
அருணாவின் கண்களும்
அதே நிலைதான்.....

நிஜமான உணர்வுகளின் அன்புப் பரிமாற்றமே அதுதானே......

இருவரும் அன்பின் பிணைப்பின் நெருக்கத்திளைப்பில் இருக்க
அந்த நேரமாய் வசந்த் அந்தக்கன்டீனில் உள் நுழைந்தான்....

"அவள் அப்படித்தான்!"

(வளர்வாள்)

அன்புடன்
ஆதித்ததாஸன்

அவள் அப்படித்தான் (3)


"போய் வருகிறேன்!" என்றது மைத்துளி!

"புறப்படு மகனே!
உன்னுடைய பிரயாணம்தான்
என்னைப் பெருமைப்படுத்துகிறது!
நீ என்
இடுப்பை விட்டு இறங்கிய பிறகுதான்
எல்லாரும் என்னை
ஏறெடுத்துப் பார்க்கிறார்கள்!
நீ பாராட்டுப் பெறும்போதுதான்
எனக்கு
ஈன்றபொழுதை விடவும்
இன்பம் கிடைக்கிறது!"

என்று பேனா பேசியது!

மைத்துளி மறுபடியும் சொன்னது!

"என்னதான் இருந்தாலும்
உன்னைப்பிரியும்போது
என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை!
அதனால்தான் கண்ணீர்த்துளிபோலக் கசிகிறேன்!

எனக்கும் அப்படித்தான்!
உன் கடைசித்துளி
என்னைவிட்டுப் பிரியும் நேரத்தில்
குமுறலைத்தாங்க முடியாமல்
நான் கொட்டத் தொடங்குகிறேன்!" கவிஞர் மு மேத்தா

பிரிவும் பரிவும் வாழ்க்கையில்
இன்றியமையாத ஒன்றாகி
மனித மனங்களின் கண்ணீருக்கும் புன்னகைக்கும்
வழிசொல்லும் வடிகாலாகிவிடுகிறது!
இதுதான் வாழ்க்கையின் நியதி!
இதை மீறியவர்கள் யாரும் கிடையாது என்று அடித்துக்கூறலாம்!

அந்த வகையில்
அருணாவும் நித்தியாவும் விதிவிலக்கல்லவே!
இரு மனங்களுக்குள்ளும்
இணைபிரியாத இனம்புரியாத பாசம்
பற்றிக்கொண்டது இருவருக்கும் வியப்பே!

ஒரு மரத்தின் கனிகள்
எங்கெங்கோ பிரிந்து பதியம்போடப்பட்டு
செடியாகி மீண்டும் சந்தையில் சந்திக்கும்
வாய்ப்புக்கிடைக்கும்போது
ஒன்றையொன்று அறியாமல் பற்றிக்கொள்ளும் நிலைபோல்....

அந்த இருமனங்களுள்ளும்
விடைபுரியா விளக்கம்தெரியாத
பாச ஒட்டாகி இருப்பதை உணரும்போது
வியப்புத்தான் பதிலாகிறது!

அருணா! அவள்
செல்வச்செழிப்போடு வளர்ந்தவள்!
செல்வத்துள் மிதந்தாலும்
செல்வச்செருக்கில் சற்றேனும் மிதக்காதவள்!

"உன்னைப் போல்
உன் அயலானையும் நேசி!" என்ற தத்துவத்தை
தன் இரத்தத்தோடு இணைத்தவள்!

இரத்தம் சுத்தம்! அதனால் அவள்
இதயம் சுத்தம்! அதனால் அவள் அகமும் சுத்தம்!
அதனால் அவள் அழகின் மொத்தம்!

அற்புதமான அவள் அழகில்
சர்வமும் மயங்கும்! சொற்பதம் கொண்டு
வடித்திட முடிந்திடாத சிற்பமவள்!
பிரமன் படைப்புகளின் அதிசயங்களில் அவளும் ஒருத்தி!

அன்பாகப் பழகும் பண்புப் பிறவியவள்!
அதனால் அவள் பலரின் மனங்கவர் பிரியை!
கற்பதில் வல்லாள்! கவிதை சொல்வதில் வெல்வாள்!

பல இளையவர் கனவுக்கண்ணாள்!
ஆனாலும் அவள் இதயத்தையாரும்
வெல்லமுடியாத வில்லாள்!

பருவங்களின் தொல்லைகளால்
அலையடித்துச்செல்லாத நல்லாள்!
இயற்கையின் இரசனையின் பிரியையவள்!
அவள் சிரிப்பழகி! சீரழகி!

நித்தியா அவளைப்பார்த்ததும்
வியந்ததில் ஆச்சரியமில்லையே!
அவள் மனதில் ஏகப்பட்ட இனம்புரியாத மகிழ்ச்சி!
இப்படியும் நல்ல உள்ளமா! ஆச்சரியம்தான்! என்று
ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவளை...

"என்ன நித்தியா! என்ன சிந்தனை! வாங்க!
இப்போது இன்ரவல்! கொஞ்சம் வாக் போவோம்! என்றாள்!
"சரி வாங்க!" என்று புறப்பட்டாள் நித்தியா!

இருவரும் வகுப்பறையை விட்டுப் புறப்பட்டு
நடந்துவரும்வேளையில்....
இருகண்கள் அவர்களைத்
தொடர்ந்து துரத்திவந்துகொண்டே இருந்ததை
அந்த இருமனங்களும் கண்டுகொள்ள வாய்ப்பே இல்லை!

கேலியும் கிண்டல்களுமாய்....
ஆண்பெண் அரட்டையடிப்புக்களுக்கு
குறைவில்லாத "இன்ரவல் ரைம்"
கல்லூரியின் சகல பக்கங்களிலும்
ஆக்கிரமித்தவண்ணம் இருக்கையில்.....
இந்த இருமனங்களும் வாட்டர்பைப் நோக்கி
நடந்தவண்ணம் இருந்தன!

நீண்ட கியூ தண்ணீருக்காக காத்திருக்க
"நித்தியா! இந்தக்கியூ இப்போது குறையாது!
வாங்க நாங்க ஜஸ்கிறீம் குடிப்போம்!" என்றாள் அருணா!

"எனக்கு வேண்டாம் அருணா!
நீங்கள் வாங்கிக்குடியுங்கள்!" என்றாள் நித்தியா!
"நித்தியா நோ வ்வோமலிற்றி!
ப்பிளீஸ்! வாங்க!" என்றபடி...

"இரண்டு ஜஸ்கிறீம் பிளீஸ்!" என்றபடி
தன் பர்ஸில் இருந்து பணத்தை எடுத்துக்கொடுத்தாள் அருணா!

வறுமையில் வாடினாலும்
யாரிடமும் கடமைப்படாதவள் நித்தியா!
தனக்காக யாரும் செலவுசெய்வதை
அவள் விரும்புவதில்லை!

ஆனாலும்...
அருணாவை அவள் வேறு ஒருத்தியாக நினைப்பதற்கு
முடியாதபடி அவள்மனதில் இருத்திவிட்டாள்!
"எப்படி இதுசாத்தியம்"!

என்று ஆச்சரியமாக
சட்டென்று சிந்தனைக்குள் நுழைந்தவளை
"நித்தியா இந்தாங்க! குடியுங்க! அடிக்கடி சிந்தனையா...
என்னைப்பற்றியதா!...என்னடா முன்பின் தெரியாத இவள்
இத்துணைதூரம் அன்பாய் இருக்கிறாளே என்றா.....

எனக்கும் புரியவில்லை நித்தியா!
மற்றவர்களிடம் இல்லாத
இனம்புரியாத ஒன்று
நம்மிடம் இணைந்திருக்கிறது...

ஏதோ ஒன்று..புரியவில்லை....
எனக்கும் அதே சிந்தனையுண்டு நித்தியா.....
ஐ டோன்ற் நோ..கௌவ் இஸ் இற் பொஸிபிள்....
இற்ஸ் றியலி வொண்டவ்வுல்...
எனிகௌவ்...வி ஆர் லக்கி...தாங்ஸ் கோட்...".என்றாள்...அருணா...

இருவரும் ஐஸ்கிறீம் குடித்துக்கொண்டு
நடந்து வருகையில் தங்கள் பின்
வேறு இருகாலடி ஓசை தொடர்வதைக் கேட்டார்கள்....

திரும்பிப்பார்த்தவள் முதலில் நித்தியாதான்!
பார்த்தகண்கள் பார்த்தபடி ஸ்தம்பிதமாய் நின்றவளை....
அருணா தாங்கிப்பிடித்துக்கொண்டாள்.....

"அவள் அப்படித்தான்".....
வளர்வாள்...(எப்போது என்ற முணுமுணுப்பா..நியாயமானதுதான்...)

அன்புடன்
ஆதித்ததாஸன்

"அவள் அப்படித்தான்!" அத்தியாயம் (2)

"காலம் வரட்டும் பொறுத்திருங்கள்" என்று சொல்லித்
தொலைபேசியை வைத்துவிட்டு சென்றுவிட்டாள் நித்தியா!
அவள் மனதில் ஆயிரம் எண்ணங்கள் சுழன்றுவர,

"காத்திருங்கள்!" என்று சொல்லிய தன் கடந்தகால
சுழற்சிக்குள் அவளை திக்குமுக்காடச் செய்த அந்தச்
சம்பவம்...அவளையே நிலை குலைய வைத்த அந்த
அழியாத கோலம் மனத்தில் சுழன்றுவர...

படுக்கையில் விழுந்தாள் நித்தியா! அவள் விழுந்த
வேகத்தில் கட்டில் மெத்தை அவளைச் சற்றுத்தூக்கி
மேலே எறிந்து மீண்டும் அவளை ஏற்றுக்கொண்டது!

கண்களில் நீர்த்திவலைகள் மெல்ல மெல்ல ஊற்றெடுக்க
அவள் எண்ண ஓட்டம் இதயமதைக் கனக்க வைக்க
ஆறாய்த் தலையணை சட்டென்று நனைந்து கொள்ள

நினைவுகள் நீர்ச்சுழிகளாய் விரிந்தன....

பள்ளி வாழ்க்கைக்குள் அடிஎடுத்து அவள் எட்டாம்
வகுப்பை ஆரம்பிக்கவென கல்லூரிக்குள் தடம்பதித்தாள்
அன்று!
'கல்லூரி புதிது! ஆசிரியர்கள் புதிது! கூடப்படிக்கும்
மாணர்கள் யார் யார் எப்படியோ' என்ற கேள்வியோடு
கலந்த பயம் அவளை ஆக்கிரமிக்க,

தன்வகுப்பறையை நோக்கி மெல்ல மெல்ல
நடந்தபோது "ஹாய் நித்தியா!" என்ற குரல் கேட்டு
திகைப்புற்றுத் திரும்பியவளுக்கு அதிர்ச்சி!

என்னடா! முன்பின் தெரியாத ஒருவன் தன்னைப்
பெயர்கூறி அழைக்கிறானே! என்ற பயத்தில் பார்த்தவளை
'என்னை உங்களுக்குத் தெரிய நியாயமில்லைத்தான்!
ஆனால் உங்களை எனக்கு நல்லாய்த்தெரியுமே!"

என்று ஓர் விஷமப்புன்னகையோடு கிட்ட அவளுக்குக்
கிட்டவே ஒட்டிக்கொள்ளும்படி, நெருங்கிவிட்டான் அவன்!
அவளுக்கு உடம்பெல்லாம் வெயர்த்துக் கொட்டியது!
நடுநடுங்கியபடியே சட்டென விலகிக்கொண்டு

வேகம்வேகமாக வகுப்பறைக்குள் நுழைந்து
கொண்டாள் அவள்! 'அவன் வருகிறானா இல்லையா'
என்ற உணர்வைவிட 'வகுப்பறைக்குள் நுழைந்துவிட
வேண்டும்' என்ற உணர்வே அவளைத் துரத்திவந்து
வகுப்பறைக்குள் நுழைய வைத்துவிட்டது.

வந்த வேகத்தில் வகுப்பறைக்குள் நுழைந்தவளை
'ஹலோ மிஸ்!' என்ற குரல் சுயநினைவுக்குள்கொண்டு
வர ஆசிரியரின் அகங்காரமான குரல் மீண்டும் "நான்
ஒருத்தி இங்கே இருப்பது தெரியவில்லையா உனக்கு"

என்ற கேள்வி இன்னும் பயத்தை உண்டுபண்ண
வெடவெடத்துப் போனாள் அவள்!
" ஸொ...றி... மிஸ்" என்றுமட்டும் அவளால் தட்டுத்தடுமாறி
கூறமுடிந்தது.

"நீதான் நித்தியாவா?."..என்ற அதிகாரம் தொனித்த
குரல் அவளை இன்னும் நிலைகுலைய வைக்க
"யேஸ்.... மிஸ்" என்றாள் அவள்.

"என்ன! உனக்கு டிசிப்பிளின் தெரியாதா?..ம்..".
என்ற அதிகாரம் தொனித்த அந்த ஆசிரியரைப்பற்றி,
அவள் மனம் சட்டென்று எடைபோட்டுக்கொள்ள

இல்லை மிஸ்..நான் வரும்போது வழியில்...
என்று சொல்ல ஆரம்பித்தவளை

"ஆ..ஆரம்பிச்சுட்டியா...எல்லாரும் சொல்லுறமாதிரி
ஏதேன் சாட்டு வைச்சிருப்பீயே..சரி சரி..போ போ...
அங்கைபோய் இரு" என்று சுட்டிக்காட்டியபடி
நீங்கள் எல்லாம் படித்து என்ன நாட்டையே
ஆளப்போறீங்க...வந்துட்டாளுங்க.." என்ற முணுமுணுப்பு

அந்த ஆசிரியரின் பண்பில்லாப் பேச்சு
அவளை மேலும் நிலைகுலையவைக்க அவள்
மனத்திற்குள், "டிசிப்பிளினைப்பத்தி இவ பேசுறாவே!
என்ன டீச்சர் இவ...முதல்ல இந்தக் கொலிஜிலை
படிப்பிக்க இவவுக்கு என்ன தகமையிருக்கு!"

என்று மனத்திற்குள் அவள் மனம்ஓலமிட்டது!
இங்கிலீஸ் பள்ளிக்கூடம் என்று அப்பாவிடம் எத்தனை
கெஞ்சிக்கேட்டு இந்த அட்மிசனை எவ்வளவு கஸ்ட்டப்பட்டு
அவள் அப்பாவின் சிநேகிதரைப் பிடித்து சிபார்சு
செய்யச்செய்து பெற்றுக்கொண்டாள் அவள்!

"எப்படியாவது தான் தன் இலட்சியத்தில்
வெற்றிபெறவேண்டும்!" என்று எத்தனையோ கனவுகளை
சுமந்துவந்த அந்த வெள்ளை உள்ளம்

"நான் பிழையான இடத்திற்குத்தான் வந்து
விட்டேனோ! நல்ல கல்லூரி என்று எல்லோரும்
பேசிக்கொள்வதைக் கேட்டுத்தான் இங்கு வர மனத்திற்குள்
கோலம் போட்டிருந்தேன்! இங்கு எல்லாம் தலைகீழாக
இருக்கிறதே!" என்று தன் மனத்தின் கோலங்கள் அழிந்து
போய்விடுமோ! என்று பயந்து கொண்டது.

இத்தனைக்கும், அந்த வகுப்பறை மயான
அமைதியாக இருந்தது அவளுக்கு அதிசயமானதாக
இருக்கவில்லை அவளுக்கு! ஆசிரியரின் குணம்தான்
அவள் மனத்திற்குள் நன்றாகப் பதிந்துவிட்டதே!

தான் இன்று கல்லூரிக்குப் புறப்படும்போதே
எத்தனையோ தடங்கல்கள்! அப்பாவிற்கு எல்லாம்
செய்துவைத்து ஆயத்தப்படுத்தி சாப்பாடெல்லாம்
தயாராக மேசையில் வைத்துவிட்டு

"அப்பா! நான் போயிட்டுவர்றேன்! சாப்பாடெல்லாம்
மேசையில் எடுத்து வைத்திருக்கிறேன்! நேரத்துக்குச்
சாப்பிடுங்க!" என்று கூறும்போதே தந்தை தும்மியது
அவளுக்கு மட்டுமல்ல தந்தைக்கும் கஸ்ட்டம்
கொடுத்திருக்க வேண்டும்! குளியலை அரைகுறையோடு
முடித்துக்கொண்டு வெளியே வந்தவர்

"கொஞ்சம் பொறம்மா...கொஞ்சம் பொறுத்துப்
புறப்படு! சகுனம் சரியில்லைப் போலிருக்கு! கொஞ்சம்
பொறுத்துப் புறப்படு!" என்றவர்

சாமியறைக்குச் சென்றதுதான் தாமதம்
"நித்தியா! இங்கை ஓடிவாம்மா!" என்றதுதான்
விழுந்தடித்து ஓடியவள் தான் ஏற்றிவைத்த சாமி
விளக்கை அணையாமல் மறந்துவிட்டது எவ்வளவு
தப்பாய்ப் போய்விட்டது தெரிந்தது!

சாமிப்படத்தோடு இருந்த தன்தாயின்
படம் அரைகுறை எரிந்த நிலையில் தந்தையின்
கையில் இருந்தது தெரிந்தது!

தனக்கு உணர்வு தெரிந்த நாளிலிருந்து தான்
காப்பாற்றி இதுவரை வைத்திருந்த படம் எரிந்ததைக்
கண்டதும் அவள் துடித்துப் போய்விட்டாள்!

"என்னம்மா! நீ கட்டாயம் இண்டைக்கு
கொலிஜ்ஜுக்கு போகவேணுமா! நாளைக்குப்
போவேனம்மா! என்னவோ சகுனம் சரியில்லைப்
போலிருக்கு!."...என்று இழுத்தார் தந்தை!
தன்மகள் குணம் அவருக்குத் தெரிந்ததுதான்!

அவள் அம்மா மாதிரி அவள்! பிடிவாதக்
குணம் நிறையவே இருக்கு! "பிறக்கும்போதே
அம்மாவை அனுப்பியவள்" என்ற வெறுப்பேயில்லாமல்
இன்றுவரை தந்தைக்குத் தந்தையாய் தாய்க்குத்
தாயாய் இருந்து பக்குவமாய் வளர்த்து வந்தவருக்கு,
அவள் குணம் தெரியாமலா இருக்கும்!

சொல்லப்போனால் அவள் அம்மாவிடம்
அவருக்குப் பிடித்ததே அந்தப்பிடிவாதம்தானே..
எத்தனை கஸ்ட்டங்கள் அடிதடிகள் மத்தியில்
தன்சகோதரங்களைத் தாய்தந்தையைப் பகைத்து
தன்காதலைத் தன்மேல்கொண்ட காதலை வெற்றி
கொள்ள வைத்தவள்!

வசதிபடைத்த குடும்பத்தில் பிறந்து, தனக்காக
அத்தனையையும் தூக்கியெறிந்து "வாழ்ந்தால் அவர்
கூடத்தான்! இல்லையேல் எனக்கு வாழ்க்கையே இல்லை!
நான் காலம் பூராக் கன்னியாகவே இருப்பேன்! என்னை
யாரும் ஒன்றும் செய்யமுடியாது! உங்கள் உங்கள்
வேலையைப் பார்த்துப் போங்கள்!" என்று

எத்தனை அடம்பிடித்து அடிஉதைவாங்கி
கடைசியில் "யாருமே வேண்டாம்! வாங்க நாங்கள்
எங்காவது போய் வாழுவோம்!" என்று

உடுத்த துணியோடு மட்டும் வந்தவள்தான்!
அன்றிலிருந்து இருவரும் ஒரு ஓலைக்குடிசை
வாழ்க்கைக்குள் எவ்வளவு அன்பாய் அந்நியோன்னியமாய்
"தேனும் பாலும்போல நகமும் சதையும்போல" என்று
சொல்வார்களே அதுபோல வாழ்ந்து ஒரு குழந்தைக்கும்
தாயாகிப் பெற்றுப்போட்டு போய்விட்டவள்!

"எவ்வளவோ ஆசைகளைச் சுமந்து தன்
பிள்ளையைச் சுமந்தவள் சட்டென்று பொட்டென்று
பூவும் பொட்டோடும் போய்விட்டாளே!" என்று அந்த
நல்ல மனம் பசி தூக்கம் தொலைத்து பற்றுக்கள்
தொலைத்து தன் பிள்ளைக்காக தன்னைத் தொலைத்து
தன்பிள்ளையின் வடிவில் அவளைப்பார்த்து

தன்மனத்தைத் தேற்றிக்கொண்டது அந்த
நல்லமனம்! அன்றிலிருந்து இன்றுவரை 'தன் மகள்
தான்' என்ற வட்டத்திற்குள் இருந்து தன்மகளைப்
பற்றிய தன்மனைவியின் கனவுகளுடனேயே வாழ்ந்துவருகிற
நிலை மற்றவர்க்கு அதிசயம்தான்! இந்தக்காலத்திலும்
இப்படி ஒரு நல்ல ஆணா! என்று ஆச்சரியப்படாதவர்கள்
இல்லையென்றே கூறலாம்.

அத்தகைய நல்லமனம் தன் பிள்ளையை
தவிக்கவிடுமா! அதனால்தான் தன்னை விட்டுத்
தூரமாக இருக்கும் கல்லூரியில் படிப்பதற்கு அவளை
அநுமதிப்பதற்கு தயங்கியது என்பது சொல்லித்தான்
தெரியவேண்டும் என்பதில்லையே...

சட்டென்று தன் சுயநினைவுக்கு வந்தவர்
தன்மகள் பிடிவாதம் தெரிந்து "சரி சரி" கொஞ்சம்
பொறுத்துப் புறப்படம்மா! என்று கூறிவிட்டு தன்பணி
பார்க்கப் போனது!

அவளுக்கும் புரியும்! தன் தந்தை எவ்வளவு
தன்மேல் பாசத்தோடு சொல்கிறார் என்று! ஆனாலும்
இந்தக்காலத்தில் சகுனம் பார்த்தால் எதுவும் செய்ய
முடியுமா! என்று யதார்த்தமாக சிந்தித்தது!மனம்!

'இன்று கல்லூரி ஆரம்பம்! இன்றுவேறு
கல்லூரிக்குப் போகாமல் இருக்கமுடியுமா! அதுவேறு
ஆங்கிலப்பாடசாலை! வெள்ளைக்காரன் ஆரம்பித்த
கல்லூரி! அங்குபோய் சகுனம் பற்றிப் பேசமுடியுமா!'

என்று பலவாறு சிந்தித்துத்தான் "வாறது
வரட்டும்" என்று புறப்பட்டவள் பஸ்ஸையும் பிந்த
விட்டு ஒருவாறு வந்துசேர்ந்து விட்டாள்!

நுழையும்போதே அபசகுனம்மாதிரி
முன்பின் தெரியாதவனின் நாகரீகம் தெரியாத கீழ்த்தரத்
தன்மை கொண்ட செயல்! அதைத்தாண்டி வகுப்பறைக்குள்
ஆசிரியரின் நாகரீகம் கெட்ட அணுகுமுறை!

எல்லாவற்றையும் அவள்மனது எண்ண
எண்ண வெறுப்பு வந்து "விட்டு ஓடிவிடலாமா! படிப்பும்
மண்ணாங்கட்டியும்" என்று கணப்பொழுது நினைத்துக்
கொண்டது!

ஆனால் மறுகணம் தன்இலட்சியமான
'ஆங்கிலப்பட்டதாரி ஆசிரியர் ஆவேன்" என்ற எண்ணம்
சட்டென்று தைரியத்தைக்கொடுக்க

"எதையும் துணிந்து எதிர்கொள்ள வேண்டும்!"
என்ற துணிவு அவள் தாயின் எதிரொலியாக அவளுக்குள்
எழுந்து அத்தனை துயரங்களையும் தூக்கியெறிந்தது!

தனக்குள்ளே தன்னை நினைத்து ஆச்சரியப்
பட்டுக்கொண்டாள் அவள்! தன் தாயை மனத்தில்
நினைத்துவிட்டால் போதும் அவளுக்குள் புதுசக்தி
பிறப்பதை அவள் என்றுமே உணர்வாள்!

"ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே!
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!" என்ற
பாடலைத் தன்தாயே தனக்காகப் படிப்பதாக தன்
மனத்துக்குள் இருந்து படிப்பதாக உணர்வாள் அவள்!

அந்தத்தைரியம் அசட்டுத் துணிச்சல்தான்
இந்தச் சின்னவயதிலேயே அவளைத் தைரியமாக
இதுவரை வழிநடத்தி வந்திருக்கிறது என்பதை அவள்
உள்உணர்வு கூறிக்கொள்ளும்! மற்றது தந்தையின்
பாசம்! தனக்காக தன்னை உருக்கி வாழ்ந்தவண்ணம்
இருக்கும் தந்தையின் பாசம்!

இரண்டும் இல்லையென்றால் அவள்
எப்போதோ தொலைந்திருப்பாளே!...

சிந்தனையில் ஆழ்ந்திருந்தவளை கல்லூரி
மணிச்சத்தம் சுய நினைவுக்குக் கொண்டுவந்து தான்
கல்லூரியில் இருப்பதை நினைவுபடுத்தியது!

பக்கத்து இருக்கையில் இருந்த மாணவி
'நித்தியா! ஐ அம் அருணா!..கிளாட் ரு மீட் யூ.."
என்ற கைகுலுக்கல் அவளுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க

"அருணா! அந்த டீச்சர் அது என்ன அப்படி
நடந்து கொண்டாவே.. ரொம்ப்பப் பொல்லாதவவாய்
இருப்பா போலிருக்கே!..நீங்களும் இந்த ஸ்கூலுக்கு
நியூவா?.." என்று கேட்டவளை

"இல்லை நித்தியா! நான் கிறேட் வண்ணில்
இருந்து இந்தக் கொலிஜ்தான்! இந்த டீச்சர் ரொம்பப்
பொல்லாதவாதான்! கன்னா பின்னா என்று அடிகூடப்
போடுவா! கிறேட் செவண்ணில் நான் படிக்கும்போது
இவாதான் கிளாஸ்ட்டீச்சர் எங்களுக்கு!

இப்ப கிறேட் ஏய்ட்டுக்கு ஒன்லி இங்கிலீஸ்
சப்ஜெக்ட் இவதான்! இவ ரொம்ப்பப் பொல்லாதவாதான்!
எல்லாருக்கும் இவ என்றாப் பயந்தான் நித்தியா!

இந்தக் கொலிஜ்ஜிலேடியே "இவதான்
டிசிப்பிளின் தெரியாத டீச்சர்" என்று சொல்வாங்க..
ஆனா மற்றவங்க எல்லாரும் நல்லவங்க! டோன்ற்
வொறி நித்தியா!" என்றாள் அருணா.

"தாங்ஸ் அருணா! ஐ அம் றியலி வெரி
ஹப்பீ...ஐ லைக் யூ வெரி மச் அருணா"..என்று
சந்தோசத்தால் கண்களில் நீர்மல்க கட்டித்தழுவினாள்
நித்தியா!
'மீ ரு நித்தியா! ஐ அம் வெரி லக்கி!
நித்தியா! வீ ஆர் ப்விறெண்ட்ஸ்! ஓகே.."

"ஓகே..ஓகே......றைட் வீ வில் பீ ஹப்பீ!
யேஸ்! யேஸ்.'.....

அன்றைய நட்பு ஆரம்பம்.......அந்த
மனங்களை.....


(வளரும்)
அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3115&hl=

"அவள் அப்படித்தான்"(1)

அன்றுதான் அவளை அவன் விட்டுப்பிரிந்த நாள்!
அந்த நாள் மறக்கமுடியாத நாளாகிவிட்டது அவனுக்கு!
என்றுமே மறக்க முடியாத நாள்தான்!
என்றுமே மறக்க முடியாதபடி செய்துவிட்டாளே!
நின்று நிதானித்;துப் பார்த்தால் அன்றே அவள்
நினைவுகளை அவன் குழிதோண்டிப் புதைத்து
விடவேண்டியவன் தான்!

ஆனால் இந்தப் பாழாய்ப்போன மனது இருக்கிறதே!
எதை நாம் மறக்க நினைக்கிறோமோ அதையே
திரும்பத் திரும்ப நினைக்கவைத்து மனத்தைக்
கசக்கிப் பிழிந்து இதயமதைப் பாடாய்ப் படுத்தி
ரணங்களைக் கிளறிப்பார்க்க வைத்துவிடுகிறதே!

எதை மறக்கக்கூடாது என்று நினைக்கிறோமோ
அதை இலகுவாய் மறந்துவிட வைத்துவிடும்
இந்த மனதை நினைத்தால் அப்படியே குழி
தோண்டிப் புதைத்துவிட வேண்டும் போல்
இருக்கிறதே! 'சீ' என்ன இந்த மனது!

"போடா போ! போடா போ!" என்று தனக்குள்
தன்னைத் தேற்றிக்கொள்ள பல தடவை எத்தனித்தும்
முடியாமல் தோற்றுப்போன நிலைகள் தான்
ஏராளம்! ஏராளம்! அந்த நினைவுகளை அவனால்
அடியோடு மறக்கத்தான் முடியாத நிலையிலும்
"புயலெனப் புறப்படவேண்டும்" என்று தன்னை
சுதாகரித்துக் கொள்வான் அவன்!

அவனிடம் எத்தனையோ நல்ல பண்புகள்! உலகத்தை
நன்றாய் புரிந்தவன் தான்! உலகத்தின் போக்குகள்
நெழிவு சுழிவுகள் எல்லாம் தெரிந்தவன்தான்!
ஆனால் இந்தப் பாழாய்ப் போன காதல் நாம்
தேடிப்போகா விட்டாலும் தானாய்த் தேடிவந்து
ஒட்டிக்கொண்டுவிடுகிறதே! ஒட்டிக்கொண்டு காலத்தைக்
கரியாக்கி இலட்சியங்களை எல்லாம் கோட்டைவிட
வைத்துவிடுகிறதே!

"அடபோடா முட்டாள்" என்று தனக்குள்தானே கத்திக்
கொள்வான்! சுவரோடு கொண்டே தலையை மோதிக்
கொள்வான்! பலன் தலை வெடித்து இரத்தம் பீறிடும்!
அதைப்பற்றிக் கவலைகூட வலிகூடத் தெரிவதில்லை
அவனுக்கு!

"சீ எல்லாப் பெண்களும் இப்படித்தானா! சீ! சீ! அப்படி
சொல்லாதேயடா! இவள் அப்படியென்றால் எல்லாரும்
அப்படியிருக்க வேண்டும் என்று நினைக்காதையடா!'
என்று அவனுக்குள் இருந்தே மறுகணம் அவன்
மனம் பேசும்!

முன்பெல்லாம் அவன் மனம் இப்படித் தடம்புரண்டு
சிந்திப்பதேயில்லை! பெண்கள் என்றால் 'பாவங்கள்
நல்லமனங்கள்! அநியாயமாக சில ஆண்கள்கைகளில்
வீணாக மாட்டிச் சித்திரைவதைப் படுகுதுகள்!
அந்த நல்லமனங்கள் அந்தச் சித்திரைவதைகளில்
இருந்து விடுபட்டு அமைதிகாணவேண்டும்! அந்த
மனங்கள் நல்லாய் இருக்கவேண்டும்!" என்று
மனதோடு இறைவனை அவர்களுக்காக வேண்டுவான்!

அப்படிப்பட்ட நல்லமனங் கொண்ட அவனுக்குத்தான்!
இத்தனை சோதனைகள்! வேதனைகள்! வலிகள்!
எப்படிப்பட்ட மனங்களிற்குள்ளும் காதல் வேர் ஓடிவிட்டால்
அது அந்த மனங்களிற்குள் எத்தனை அற்புதமான
கோலங்களைப் போடவைத்துவிடுகிறது!

போடுகின்ற கோலங்கள் இரண்டுமனங்களும் ஒன்றாய்
போடுகின்ற கோலங்களானால் அங்கு இன்பத்திற்கு
இன்பவெள்ளத்திற்கு தங்குதடையேது!


அப்படித்தான் அன்று அவன் அவளைச்சந்தித்தபோது
நினைத்திருந்தான்! சட்டென்று அவன் அந்த நினைவுக்குள்
திரும்பிக்கொண்டான்! நினைவுகள் திரைப்படங்களில்
வருகின்ற காட்சிகளாய் சுழிபோட்டன!.....

ட்றீங்..ட்றீங்....ட்றீங்....என்ற தொலைபேசி அழைப்பு
அவனுக்குள் அவன் உணர்வுக்குள் ஏதோ ஒரு
நல்லசெய்தியைச் சொல்லப்போகிறதே என்று இதயம்
படபடத்துக் கொள்ள றிசீவரைத்தூக்கினான்!

"வணக்கம்' என்றான்!
"வணக்கம்! அங்கே ஆதியோடு பேசலாமா!'
என்ற அழகான குரல்! குரல் பழக்கப்பட்ட குரலாகத்தான்
அவனுக்குள் நன்கு தெரிந்த குரலாகத்தான்
ஆனால் அவனோடு நேரிடையாகப் பேசாத
இதுவரை பேசியிராத குரலாக இருந்தது அவனுக்கு!

சட்டென்று நிதானத்திற்கு வரமுடியாதபடி அந்தக்
குரல் அவனுக்குள் அந்தக் கணப்பொழுதுகளில்
ஒரு இன்ப அதிர்ச்சி கலந்த ஆச்சரித்தை
அவனுக்குள் புதுவித உணர்வினைக் கொடுத்தது!

இதயம் படபடத்தபடி "ஆமாம் நான்தான் பேசுகிறேன்!
ஆமா, நீங்க......என்று இழுத்தது அவன் மனம்!
நான் நித்தியா கதைக்கிறேன்! அங்கை உங்களுக்கு
பேசக்கூடியதாக நேரம் இருக்கிறதா!'.....என்றது அந்த
தேன்குரல்!

"ஓ! யா!...வட் எ சப்பிறைஸ்!
எப்படி இருக்கிறீங்க! எப்படி இருக்கிறீங்க!" என்று
படபடத்தான் அவன்!
ஓ! நான் எதிர்பார்க்கவில்லையே! ஆனால் என்மனம்
நிறையவே எதிர்பார்த்திருந்தது உங்கள் அழைப்பை!
ஓ!யா! ஐ கான்ற் ப்பிலீவ்!"

"எப்படி இருக்கிறீங்க?.....அதென்ன! இப்படித் திடீரென்று
அழைக்கவேண்டிவந்தது! உண்மையில் ஆச்சரியமாக
இருக்கிறதே! சொல்லுங்கள்!'


"ம்...ம்...நீங்கள்தான் மற்றைய மனங்களை நாடிபிடித்துப்
பார்ப்பதில் கெட்டிக்காரரே! மற்ற மனங்களுக்குள்
புகுந்துபார்த்து அவர்கள் நிலையறிந்து அப்படியே
கதையாய் எழுதிவிடும் கைவந்த கலையோடு
இருப்பவராயிற்றே! உங்களுக்கு நானா சொல்லவேண்டும்!"


"ஐயையோ! அப்படியெல்லாம் சொல்லாதீங்க!
அவ்வப்போது மனதில் ஏதோ வரும்! அதை அப்படியே
கிறுக்குவதுதான்! அதையெல்லாம் கதையென்று
சொல்வதா! ம்.ஹம்..ம்ஹம்...அதெல்லாம் கிறுக்கன்
கிறுக்கும் கிறுக்கல்கள்தான்! அதையெல்லாம் கதை
யென்றால் நம்ம கதாசிரியர்களெல்லாம் போர்க்கொடி
தூக்கி உங்களை உண்டு இல்லையென்று ஆக்கிவிடுவாங்க!
உங்களை இரசனை தெரியாத ஜென்மம் என்று
போட்டுப்பிடிக்கப் போறாங்க!'


"என்ன நீங்கள் இப்படிச் சொல்றீங்கள்! எங்கும்
உங்கள் பேச்சாகவே இருக்கிறது! எல்லாரும்
உங்கள் புகழ் பாடுறாங்க! அவர் ஒரு அற்புதமான
யதார்த்தமான எழுத்தாளர் என்கிறார்கள்!
அதிலும் நீங்கள் அண்மையில் எழுதி வானொலி
ஒன்றில் வந்த "இதுதான் உலகமா" என்ற கதை
வந்ததிலிருந்து ஐரோப்பா முழுவதும் மட்டுமல்ல
கனடாவிலும் அதுபற்றிய பேச்சாகவே இருக்கிறதாம்!
என் நண்பி கூறினாள்! எங்கும் உண்மையில்
உங்கள் பேச்சுத்தான்! நீங்கள் என்னடாவென்றால்...


"ஐயையோ! அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை!
உண்மையில் அது ஒரு தற்செயலான கிறுக்கல்தான்!
ஒருநாள் அர்த்தஜாமத்தில் எழுந்து ஏதே கிறுக்க
வேண்டும்போல் இருந்தது! எழுந்து கிறுக்கியதுதான்
அது! அதுபோய் இத்தனை மனங்களை ஊடுருவியிருக்கிறதே!
என்று எனக்கும் உண்மையில் ஆச்சரியம்தான்!"


நான் ஒன்று சொன்னால் தப்பாக நினைக்கமாட்டீர்களே!
அது ஒரு நிஜமான கதைதான்! என் நண்பி ஒருத்தியின்
கதை அப்படியே நீங்கள் எழுதிய கதை அது அவள்
நிஜக்கதையாக இருக்கிறதே!

அதில் நீங்கள் குறிப்பிட்ட அந்தக் கணவன் அவளைக்
கொடுமைப்படுத்தி பலாத்காரமாக அவளை அநுபவித்து
விட்டு "நீ ஆம்பிளைப் பிள்ளைதான் பெத்துக்கணும்!
பெம்பிளைப் பிள்ளையைப் பெத்தா தொலைத்திடுவேன்!
தொலைத்து" என்று அவளை அந்தக் கதாநாயகியை
அவள் கணவன் உதைத்துவிட்டுப் போனதுபோல்
என் நண்பியின் கணவனும் அத்தகைய
கொடுமையைச் செய்திருக்கிறான்!

உங்கள் அந்தக்கதை அப்படியே அவள் வாழ்க்கையைத்
தான் படம்பிடித்திருக்கிறது! அவள்கூட உங்கள் கதையைப்
பார்த்திருக்கிறாள். அதைப்பற்றி என்னிடம் கேட்டாள்!
நானும் உங்களைப் பற்றி எனக்குத் தெரிந்ததைக்
கூறியிருக்கிறேன்!" என்றாள் நித்தியா.

"அதுசரி நித்தியா! என்னைப்பற்றி உங்களுக்கு என்ன
வெல்லாம் தெரிந்திருக்கிறது! இன்றுதானே என்னுடன்
முதன்முதலாகப் பேசுகிறீர்கள்! அப்போ என்னைப்
பற்றி என்ன தெரிந்திருக்கிறீர்கள்! ம்.கூறுங்கள்!
நித்தியா! கூறுங்கள்!"

"நான் உங்கள் இரசிகை! உங்கள் கதைகள் கட்டுரைகள்
கவிதைகள் எல்லாவற்றையும் இரசித்துவருகின்ற
இரசிகை நான்! அதிலும் உங்கள் "பூர்வஜென்ம
புண்ணியம்" கவிதை வானொலி ஒன்றில் கேட்டு
அந்தக்கவிதைக்குள் நான் என்னைத்தொலைத்தது
உங்களுக்குத் தெரியாது!" என்றாள் நித்தியா.

"ஓ! அந்தக்கவிதையா! அதுகூட ஒரு எதேச்சையாக
வந்த கவிதைதான்! அது எழுதும்போது ஒரு நான்கரை
மணி அதிகாலை இருக்கும்! ஒரு கனவு கண்டு
எழுந்து அப்படியே அதைக் கிறுக்கிக்கொண்ட
ஒன்றுதான்! ஆனால் அது அந்த வானொலியில்
வந்தபின் எனக்குள்ளும் அந்தக் கவிதை ஓர்பாதிப்பை
ஏற்படுத்தியது உண்மைதான்! அதற்குள் எனக்கு
ஏதோ தொடர்பு ஒன்று இருப்பதாக நான் உணரக்
கூடியதாக இன்றும் இருக்கிறது நித்தியா!'


"ஓ! உஙகளுக்கும் அது இருக்கிறதா! அப்போ நான்
நினைக்கிறது சரிதான்! ம்...ம்...நான் ஒன்று கேட்கட்டுமா!
கேட்டால் கோபிக்கமாட்டீர்களே!" என்று சற்றுத்
தயக்கத்தோடு இழுத்தாள் அவள்.

"இல்லை! இல்லை! தயங்காமல் கேளுங்கள்! எந்த
வித கூச்சமும் வேண்டாம்! தயங்காமல் கேளுங்கள்!
தயங்காமல் கேளுங்கள் நித்தியா!"

என்று கூறினாலும் தனக்குள் "இவள் என்ன கேட்கப்
போகிறாளோ" என்று மனம் அடித்துக்கொண்டதை
அவள் அறியமுடியாதபடி சிரமப்பட்டு அடக்கிக்
கொண்டான் அவன்!

'இல்லை! வந்து...வந்து..உங்களுக்குத் திருமணம்
ஆகிவிட்டதா?."...என்று தட்டுத்தடுமாறினாள் அவள்.

"ஆமா! ஆமா! ஏன் கேட்கிறீர்கள்?" என்றான் ஒரு
அப்பட்டமான பொய்யை அவன் அவிழ்த்து விட்டதை
அறியாத அவள்

"இல்லை! சும்மாதான் ..சும்மாதான்..கேட்டேன்! பிள்ளைகள்
இருக்கிறார்களா?....எத்தனைபிள்ளைகள் என்று
அறிந்துகொள்ளலாமா?"..

"தாராளமாக! தாராளமாக!
இரண்டு பிள்ளைகள்! இரண்டு பெண்பிள்ளைகள்!"
என்று மீண்டும் ஒரு பெரிய பொய்யை அவிழ்த்து
விட்டான்! சரளமாகப் பொய்பேச வராதுதான்!
அந்த நேரம் எப்படித்தான் வந்ததோ! அவனுக்கே
ஆச்சரியமாக இருந்தது.

மறுமுனையில் சற்றுமௌனம்! "என்ன பேச்சைக்காணோம்!"
"இல்லை! இல்லை! உங்கள் மனைவி கொடுத்து வைத்தவர்!
அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்! நான் பின்பு
பேசுகிறேனே!"...என்று இழுத்தாள்!

"தாராளமாக! தாராளமாக! ஒரு விடயம்!
நான் உங்கள் இரசிகன் என்பது உங்களுக்குத்
தெரியுமா! நீங்கள்தான் வானொலியில் நன்றாக
கவிதை படிப்பீர்கள்! பாட்டுப் படிப்பீர்கள்!
அதையெல்லாம் நான் ஒலிப்பதிவு செய்து வைத்திருக்கிறேன்!
போட்டுக் காட்டவா!" என்றான் அவன்!

"என்ன! என் கவிதைகளா! அதையெல்லாம் பதிவு
செய்து வைத்திருக்கிறீங்களா! உண்மையாகவா!
எங்கே போட்டுக்காட்டுங்களேன்!" என்றாள் ஆர்வத்தோடு
அவள்.

"அதென்ன! நீங்கள் இரசிகையாக இருக்கலாம்!
நான் இரசிகனாக இருக்கக் கூடாதா! கவிதைபாடும்
நேரத்தில் நீங்கள் வரும்போது சட்டென்று பதிந்து
கொள்வேன்! பதிந்தபின்பு மீண்டும் மீண்டும் போட்டுக்
கேட்பதுண்டு! சும்மா சொல்லக்கூடாது! உங்கள்
குரலோடு அந்தக் கவிதை வரும்போது எவ்வளவு
இனிமையாக இருக்கிறது தெரியுமா!"என்றான் அவன்!

"சும்மா சொல்லாதீங்கள்! உங்களுக்கு எத்தனையோ
இரசிகைகள் இருக்கிறார்கள்! அப்படியிருக்க நீங்கள்
என் இரசிகன் என்னும்போது நம்பமுடியாமல் இருக்கிறதே!
நீங்கள் நல்லாய்ப் பொய் சொல்கிறீங்கள்! உண்மையாய்
என்கவிதைகளைப் பதிந்து வைத்திருக்கிறீங்களா.."
என்ற ஆர்வத்தோடு கேட்டாள்!

"ஆமாம்! ஆமாம்! எனக்குப் பொய்சொல்றதைத்தவிர
வேறு என்ன வேலை! அப்படியே ஒருநிமிடம் இருங்கள்!
வருகிறேன்!" என்று சொல்லிக்கொண்டே அவள்
கவிதையைப் போட்டு தொலைபேசியைக் கிட்டவைத்து
கேட்கவைத்தான்! அவன்!

"என்ன கேட்டாயிற்றா! இப்ப என்ன சொல்றீங்கள்!
இப்பவாவது நான் உங்கள் இரசிகன் என்று
ஒத்துக்கொள்வீர்களா! உங்களுக்குள் எவ்வளவு
திறமையிருக்கிறது தெரியுமா! நிட்சயமாய்
உங்களுக்குள் ஒளிந்திருக்கிற திறமையை என்றோ
ஒருநாள் உலகம் தெரிந்து கொள்ளத்தான் போகிறது!
வாழ்த்துக்கள் நித்தியா! வாழ்த்துக்கள் நித்தியா!
எனக்கு சற்று வெளியில் வேலையிருக்கிறது!
உங்கள் அழைப்பு எனக்கு நிறைஞ்ச சந்தோசம்
நித்தியா!" என்று அவசரக்கடமையழைக்க அவன்
அவசரப்பட்டான்!

"அப்போ நான் பின்பு அழைத்துப்பேசலாமா! உங்களுக்கு
நான் தொந்தரவு கொடுக்கிறமாதிரி இருக்காதுதானே!"
என்றாள் அவள்!

"ம்ஹம் ...ம்ஹம்...நீங்கள் நேரம் கிடைக்கிறபோதெல்லாம்
எடுத்துப்பாருங்க! நான் வீட்டில் இருந்தால் பேசுவேன்!"

"உங்கள் மனைவி உங்களுக்குத் தொந்தரவு கொடுக்க
மாட்டாவா! தப்பாய் நினைக்கமாட்டாவா..நான் வேறு
உங்களுக்குத் தொந்தரவாய் இருக்கக்கூடாது!
இல்லையா!"என்று ஏக்கத்தோடு அவள் கேட்டது
அவனுக்கு ஒருபுறம் சிரிப்பாகவும் மறுபுறம் அவளை
நினைக்கப் பாவமாகவும் இருந்தது!


சிரித்துக்கொண்டே "சரி!சரி! மனைவியிடம் என்னிடம்
பேசவேண்டும் என்று கூறுங்கள்! நான் நின்றால் அநேகமாக
நானே தொலைபேசியை றிஸீவ் பண்ணுவேன்!
நீங்கள் பயப்படும்படியாக ஒன்றும் இருக்காது!

அதுசரி! உங்களுக்கு யார் என்னுடைய தொலைபேசி
இலக்கத்தை தந்தது நித்தியா!என்று கேட்டான் அவன்!

"நீங்கள்தான் பெரிய எழுத்தாளராய்ச்சே! உங்கள்
தொலைபேசி இலக்கம் எப்பவோ எனக்குக் கிடைத்து
விட்டது! ஆனால் எனக்குத்தான் பயமாக இருந்தது!
நீங்கள் ஏதாவது நினைப்பீர்களோ என்று....
பலதடவை றிசீவரைத் தூக்கி டயல்பண்ணி றிங்
வரக்குமுன்னமே துண்டித்துவிடுவேன்! பயமாயிருக்க
அப்படியே வைத்திடுவேன்!"

"ஓ! ஓ! அது நீங்கதானா! அதுதானே பார்த்தேன்!
யாரடா எடுத்து எடுத்து கட்பண்ணுவது யாரடான்னு
பார்த்தேன்!