செவ்வாய், 9 ஜூன், 2009

அவள் அப்படித்தான்!" (6)


"போய்வருகிறேன்!" என்றது வார்த்தை!

"உள்ளே உறங்கிக் கிடப்பதை விட
வெளியே உலவிக் கொண்டிருப்பது நல்லதுதான்!
புறப்படு!" என்றது உதடு!

"உள்ளுக்குள் இருந்தவரைக்கும் கவலை இல்லை!
வெளியே போனால் விமர்சனங்கள் வரும்!"

"விமர்சனங்கள் இல்லாது வாழ்க்கை ஏது!
கவலைப் படாதே!"

"எப்போது வந்தாலும் எனக்கு இடம் கொடுப்பாய் அல்லவா!"
என்று உதட்டைப் பார்த்து உறுதி மொழி கேட்டது வார்த்தை!

"ஒரே ஒரு சமயத்தில் மட்டும்
உனக்கு இடம் கொடுக்க முடியாது!"
என்னை நீ அப்போது தவறாகக் கருதக்கூடாது!"

"எப்போது!"

"என்னுடைய இரண்டு உதடுகளை
இன்னொருவருடைய உதடுகள் சந்திக்கும்போது!"

---------------கவிஞர் மு மேத்தா------------
உறங்கிக் கொண்டிருக்கும் உதடுகள்
மெல்ல முனகியது!
"தண்ணீர்! தண்ணீர்! தண்ணீர்தாங்கோ!'
என்ற முனகல்கேட்டு நர்ஸ் ஓடிவந்தாள்!

கண்கள் மூடிய நிலையில்
வாடிய மலராய் துவண்டுபோய்க் கிடந்த
நித்தியாவைப் பார்த்து......

'ச்..சே...இப்படி ஒரு பெண்ணுக்கு இந்த நிலையா!'
ஓடிச்சென்று தண்ணீர் எடுத்து வந்து
அவள் உதடுகளை மெல்ல நீக்கி
சிறு சிறு துளியாக விட்டுக்கொண்டாள் நர்ஸ்!

சற்று நேரத்துக்கெல்லாம் அவளின்
முனகல் அமைதி கண்டது!
இந்தச் சின்ன வயதில் இப்படி
ஒரு நோய் இவளை எப்படி நெருங்கிக்
கொண்டது!

'இந்த அழகுச் சிலைக்கு இந்தத் தீர்ப்பை எழுத
எப்படித்தான் இறைவனுக்கு மனசு வந்தது!'

'பருவ வயது அநுபவிக்கக் காத்திருக்கும் இன்பங்கள்
அவளை விட்டு இவ்வளவு தூரம் விலகிச்செல்ல
விதியே நீ செய்து கொண்ட ஒப்பந்தம் தான் என்ன!'

'உன் சதிக்கு இவள்தான் கிடைத்தாளா!
இவளை ஏன் பலியாக்க நினைக்கிறாய்!
பார்! அந்த பருவநிலா செய்த தவறுதான் என்ன!
பார்த்தவர்கள் கண்படும் அழகு!
இப்படித் துவண்டு கிடக்கிறதே!'

'தேவனே! உன் தீர்ப்பை மாற்று!
அவளை வாழவை!' என்று
மன்றாட்டமாய்க் கெஞ்சியது அந்த நர்ஸ்ஸின் மனம்!

தீர்ப்புக்கள் திருத்தப்படுமா!
திருத்தி எழுதப்படுமா!
முடிகிற காரியமா! இது!

ஒன்றுக்கு மூன்று வைத்தியர்கள்
கூடித்தீர்மானித்து முடிவெடுத்துவிட்டார்களே!
இனித்தெய்வத்தாலும் முடியாது!
என்று நேரம் கணித்துவிட்டார்களே!

இன்னும் எட்டு மணித்தியாலங்கள்!
அத்தோடு அவள் உயிர் விடைபெற்றுவிடுமா!
இறைவா என்ன இது சோதனை!'
என்ற யோசனையோடு மூழ்கியிருந்தவளை...

'மிஸ் சித்திரா!
இப்போ அந்தப் பேஸன்ற்ரின் அப்பாவை மட்டும்
உள்ளே அழைத்துவாங்க!"..
என்ற டாக்டர் காண்டீபனின் குரல் கேட்டு
திடுக்கிட்டவள்....

"தண்ணீர் கேட்டு முனகினா டாக்டர்!
கொஞ்ச ட்றொப்ஸ் விட்டிருக்கிறேன்!
மற்றும்படி கண்முழிக்கவே இல்லை!
என்று கூறிக்கொண்டே வெளியில் போக முனைந்தவளை..

"மிஸ் சித்திரா! வண்மினிட்!
அவருக்கு எதுவுமே கூறாமல்
கூட்டியிட்டு வாங்க! றைட்!...என்றார் காண்டீபன்!
"சரி டாக்டர்"....என்று கதவைத்திறந்தாள் சித்திரா...

அங்கே தந்தை கண்களில்
தாரை தாரையாக நீர் வழிந்தோட....
அவரைச்சுற்றி ஒரு கூட்டம்...
அதில் அருணா அவரைத்தாங்கிப்பிடித்தபடி..
ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தாள்!

கதவுதிறந்து கொண்டதும்
அடக்கிவைத்திருந்த
அத்தனைதுயரமும் பீறிட்டுக்கொண்டு வெளிவர.....

" ஐயோ என் மகளுக்கு என்னாச்சு!"
என்று அவர் கத்திய சத்தம்....
அந்த நர்ஸ்ஸிங்ஹோமையே ஓர் உலுக்கு உலுக்கியது!

அவர் சித்திராவையும் தள்ளிக்கொண்டு
உள்ளே வந்த வேகத்தை
டாக்டர் காண்டீபனால்கூட கட்டுப்படுத்த
முடியாமல் போய்விட்டது!

தன் பலம்கொண்ட மட்டும் தாங்கிப்பிடிக்க
முயற்சிசெய்த காண்டீபனால்...
அது முடியாமற்போகவே...
அவர்போக்கிலேயே அவரை விட்டுவிட்டார்...

"ஐயோ என் மகளே!
உனக்கு என்னம்மா நடந்தது...
ஐயோ நான் சொன்னேனே...நீ கேட்டீயா!
உன்னை இந்தக்கோலத்தில்
பார்ப்பதற்காடி! பாவி! பாவி!
உன் அம்மா புண்ணியஞ் செய்தவளடி!
போயிட்டாள் புண்ணியவதி!...நான் உன்னை இந்தக்கோலத்தில்
பார்க்கவா இதுவரைகாலமும் காத்திருந்தேன்".....

"டாக்டர்! என் பொண்ணுக்கு என்ன டாக்டர்..
என்ன நடந்தது டாக்டர்..
எல்லா இடத்தாலையும் வயர் கொழுவி விட்டிருக்கிறீங்கள்!
என்ன டாக்டர்! அவளுக்கு என்ன"...

தலையில் அடித்துக்கொண்ட
அந்தத் தந்தையின் நிலையைப் பார்க்க காண்டீபனுக்கு
எப்படி அவரைத் தேற்றுவது என்று புரியவில்லை....

பாசம்! எத்துணை தூரம் கொடுமையானது...
வேஷம் நிறைந்த உலகத்தில் பாசம் இன்னும்
சில இடங்களில் பார்க்கக் கூடியதாகத்தானே இருக்கிறது!

அமைதிக்கு ஆறுதலுக்குக் உடந்தையாக இருக்கிற
பாசம் வேஷமாகிப்போனாலும் துயரந்தான்!
அதுவே அளவுக்கு மீறிவிட்டால் அதுவும் துயரந்தான்!

'அந்தத் தந்தைக்கு எவ்வாறு எடுத்துச்சொல்வது'
என்று காண்டீபனுக்கு ஒன்றும் புரியவில்லை....
அவரைக் கைத்தாங்கலாப் பிடித்து
அருகிலிருந்த கதிரையில் அமர வைத்தான்!

அவரின் இருகைகளும் தன்னை இறைஞ்சுவதை
அவனால் உணரமுடீந்தது! தன் தந்தையின் நிலையில்
அவரை அவனால் பார்க்க முடிந்தது!

எதற்கும் எளிதில் கலங்காத அவனின் கண்கள்
அந்தத் தந்தைக்கு தான் சொல்லப்போகும் செய்தியை
அவரால் எப்படித்தாங்கிக்க முடியப்போகிறது
என்பதை எண்ணிப்பார்க்க....

அவனையும் மீறி அவன்கண்களில் இருந்து
இரண்டுதுளிநீர் அந்தத்தந்தையின் கையை நனைத்தது!

தன்னைத் தெய்வமாகப் பார்க்கும்
தந்தைக்கு தான் என்ன சொல்வது என்று
புரியாமல் சில கணப்பொழுதுகளைக் கழித்துவிட்டான்..

'ஒன்றும் இல்லை ஐயா!
உங்க பொண்ணைக் கடவுள் கைவிடமாட்டான்!
தைரியமாக இருங்கள்!

என்று அவனை மீறி
அவன் வார்த்தைகள்வெளிவந்தன!...
'உண்மையைச் சொல்லித் தைரியப்படுத்துவோம';
என்று நினைத்தவனின்
மனதில் அவனையும் மீறி வந்த வார்த்தைகள்......

அப்பா! அப்பா!இங்கை வாங்கப்பா....
என்ற குரல்கேட்கவும்....

"அவள் அப்படித்தான்!" (வளருவாள்)

நன்றி!

அன்புடன்
ஆதித்ததாஸன்
பி.கு
(கதையில் இடம்பெறும் பாத்திரங்களின் பெயர்கள் யாவும் கற்பனையே!
கதை நிஜ நிழல் இணைந்தவையே! கதை என்றால் ஜதார்த்தங்களுடன்
கற்பனையும் இணைந்திருக்கவேண்டும் என்பது என் எண்ணம்!)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக