செவ்வாய், 9 ஜூன், 2009

"அவள் அப்படித்தான்"(1)

அன்றுதான் அவளை அவன் விட்டுப்பிரிந்த நாள்!
அந்த நாள் மறக்கமுடியாத நாளாகிவிட்டது அவனுக்கு!
என்றுமே மறக்க முடியாத நாள்தான்!
என்றுமே மறக்க முடியாதபடி செய்துவிட்டாளே!
நின்று நிதானித்;துப் பார்த்தால் அன்றே அவள்
நினைவுகளை அவன் குழிதோண்டிப் புதைத்து
விடவேண்டியவன் தான்!

ஆனால் இந்தப் பாழாய்ப்போன மனது இருக்கிறதே!
எதை நாம் மறக்க நினைக்கிறோமோ அதையே
திரும்பத் திரும்ப நினைக்கவைத்து மனத்தைக்
கசக்கிப் பிழிந்து இதயமதைப் பாடாய்ப் படுத்தி
ரணங்களைக் கிளறிப்பார்க்க வைத்துவிடுகிறதே!

எதை மறக்கக்கூடாது என்று நினைக்கிறோமோ
அதை இலகுவாய் மறந்துவிட வைத்துவிடும்
இந்த மனதை நினைத்தால் அப்படியே குழி
தோண்டிப் புதைத்துவிட வேண்டும் போல்
இருக்கிறதே! 'சீ' என்ன இந்த மனது!

"போடா போ! போடா போ!" என்று தனக்குள்
தன்னைத் தேற்றிக்கொள்ள பல தடவை எத்தனித்தும்
முடியாமல் தோற்றுப்போன நிலைகள் தான்
ஏராளம்! ஏராளம்! அந்த நினைவுகளை அவனால்
அடியோடு மறக்கத்தான் முடியாத நிலையிலும்
"புயலெனப் புறப்படவேண்டும்" என்று தன்னை
சுதாகரித்துக் கொள்வான் அவன்!

அவனிடம் எத்தனையோ நல்ல பண்புகள்! உலகத்தை
நன்றாய் புரிந்தவன் தான்! உலகத்தின் போக்குகள்
நெழிவு சுழிவுகள் எல்லாம் தெரிந்தவன்தான்!
ஆனால் இந்தப் பாழாய்ப் போன காதல் நாம்
தேடிப்போகா விட்டாலும் தானாய்த் தேடிவந்து
ஒட்டிக்கொண்டுவிடுகிறதே! ஒட்டிக்கொண்டு காலத்தைக்
கரியாக்கி இலட்சியங்களை எல்லாம் கோட்டைவிட
வைத்துவிடுகிறதே!

"அடபோடா முட்டாள்" என்று தனக்குள்தானே கத்திக்
கொள்வான்! சுவரோடு கொண்டே தலையை மோதிக்
கொள்வான்! பலன் தலை வெடித்து இரத்தம் பீறிடும்!
அதைப்பற்றிக் கவலைகூட வலிகூடத் தெரிவதில்லை
அவனுக்கு!

"சீ எல்லாப் பெண்களும் இப்படித்தானா! சீ! சீ! அப்படி
சொல்லாதேயடா! இவள் அப்படியென்றால் எல்லாரும்
அப்படியிருக்க வேண்டும் என்று நினைக்காதையடா!'
என்று அவனுக்குள் இருந்தே மறுகணம் அவன்
மனம் பேசும்!

முன்பெல்லாம் அவன் மனம் இப்படித் தடம்புரண்டு
சிந்திப்பதேயில்லை! பெண்கள் என்றால் 'பாவங்கள்
நல்லமனங்கள்! அநியாயமாக சில ஆண்கள்கைகளில்
வீணாக மாட்டிச் சித்திரைவதைப் படுகுதுகள்!
அந்த நல்லமனங்கள் அந்தச் சித்திரைவதைகளில்
இருந்து விடுபட்டு அமைதிகாணவேண்டும்! அந்த
மனங்கள் நல்லாய் இருக்கவேண்டும்!" என்று
மனதோடு இறைவனை அவர்களுக்காக வேண்டுவான்!

அப்படிப்பட்ட நல்லமனங் கொண்ட அவனுக்குத்தான்!
இத்தனை சோதனைகள்! வேதனைகள்! வலிகள்!
எப்படிப்பட்ட மனங்களிற்குள்ளும் காதல் வேர் ஓடிவிட்டால்
அது அந்த மனங்களிற்குள் எத்தனை அற்புதமான
கோலங்களைப் போடவைத்துவிடுகிறது!

போடுகின்ற கோலங்கள் இரண்டுமனங்களும் ஒன்றாய்
போடுகின்ற கோலங்களானால் அங்கு இன்பத்திற்கு
இன்பவெள்ளத்திற்கு தங்குதடையேது!


அப்படித்தான் அன்று அவன் அவளைச்சந்தித்தபோது
நினைத்திருந்தான்! சட்டென்று அவன் அந்த நினைவுக்குள்
திரும்பிக்கொண்டான்! நினைவுகள் திரைப்படங்களில்
வருகின்ற காட்சிகளாய் சுழிபோட்டன!.....

ட்றீங்..ட்றீங்....ட்றீங்....என்ற தொலைபேசி அழைப்பு
அவனுக்குள் அவன் உணர்வுக்குள் ஏதோ ஒரு
நல்லசெய்தியைச் சொல்லப்போகிறதே என்று இதயம்
படபடத்துக் கொள்ள றிசீவரைத்தூக்கினான்!

"வணக்கம்' என்றான்!
"வணக்கம்! அங்கே ஆதியோடு பேசலாமா!'
என்ற அழகான குரல்! குரல் பழக்கப்பட்ட குரலாகத்தான்
அவனுக்குள் நன்கு தெரிந்த குரலாகத்தான்
ஆனால் அவனோடு நேரிடையாகப் பேசாத
இதுவரை பேசியிராத குரலாக இருந்தது அவனுக்கு!

சட்டென்று நிதானத்திற்கு வரமுடியாதபடி அந்தக்
குரல் அவனுக்குள் அந்தக் கணப்பொழுதுகளில்
ஒரு இன்ப அதிர்ச்சி கலந்த ஆச்சரித்தை
அவனுக்குள் புதுவித உணர்வினைக் கொடுத்தது!

இதயம் படபடத்தபடி "ஆமாம் நான்தான் பேசுகிறேன்!
ஆமா, நீங்க......என்று இழுத்தது அவன் மனம்!
நான் நித்தியா கதைக்கிறேன்! அங்கை உங்களுக்கு
பேசக்கூடியதாக நேரம் இருக்கிறதா!'.....என்றது அந்த
தேன்குரல்!

"ஓ! யா!...வட் எ சப்பிறைஸ்!
எப்படி இருக்கிறீங்க! எப்படி இருக்கிறீங்க!" என்று
படபடத்தான் அவன்!
ஓ! நான் எதிர்பார்க்கவில்லையே! ஆனால் என்மனம்
நிறையவே எதிர்பார்த்திருந்தது உங்கள் அழைப்பை!
ஓ!யா! ஐ கான்ற் ப்பிலீவ்!"

"எப்படி இருக்கிறீங்க?.....அதென்ன! இப்படித் திடீரென்று
அழைக்கவேண்டிவந்தது! உண்மையில் ஆச்சரியமாக
இருக்கிறதே! சொல்லுங்கள்!'


"ம்...ம்...நீங்கள்தான் மற்றைய மனங்களை நாடிபிடித்துப்
பார்ப்பதில் கெட்டிக்காரரே! மற்ற மனங்களுக்குள்
புகுந்துபார்த்து அவர்கள் நிலையறிந்து அப்படியே
கதையாய் எழுதிவிடும் கைவந்த கலையோடு
இருப்பவராயிற்றே! உங்களுக்கு நானா சொல்லவேண்டும்!"


"ஐயையோ! அப்படியெல்லாம் சொல்லாதீங்க!
அவ்வப்போது மனதில் ஏதோ வரும்! அதை அப்படியே
கிறுக்குவதுதான்! அதையெல்லாம் கதையென்று
சொல்வதா! ம்.ஹம்..ம்ஹம்...அதெல்லாம் கிறுக்கன்
கிறுக்கும் கிறுக்கல்கள்தான்! அதையெல்லாம் கதை
யென்றால் நம்ம கதாசிரியர்களெல்லாம் போர்க்கொடி
தூக்கி உங்களை உண்டு இல்லையென்று ஆக்கிவிடுவாங்க!
உங்களை இரசனை தெரியாத ஜென்மம் என்று
போட்டுப்பிடிக்கப் போறாங்க!'


"என்ன நீங்கள் இப்படிச் சொல்றீங்கள்! எங்கும்
உங்கள் பேச்சாகவே இருக்கிறது! எல்லாரும்
உங்கள் புகழ் பாடுறாங்க! அவர் ஒரு அற்புதமான
யதார்த்தமான எழுத்தாளர் என்கிறார்கள்!
அதிலும் நீங்கள் அண்மையில் எழுதி வானொலி
ஒன்றில் வந்த "இதுதான் உலகமா" என்ற கதை
வந்ததிலிருந்து ஐரோப்பா முழுவதும் மட்டுமல்ல
கனடாவிலும் அதுபற்றிய பேச்சாகவே இருக்கிறதாம்!
என் நண்பி கூறினாள்! எங்கும் உண்மையில்
உங்கள் பேச்சுத்தான்! நீங்கள் என்னடாவென்றால்...


"ஐயையோ! அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை!
உண்மையில் அது ஒரு தற்செயலான கிறுக்கல்தான்!
ஒருநாள் அர்த்தஜாமத்தில் எழுந்து ஏதே கிறுக்க
வேண்டும்போல் இருந்தது! எழுந்து கிறுக்கியதுதான்
அது! அதுபோய் இத்தனை மனங்களை ஊடுருவியிருக்கிறதே!
என்று எனக்கும் உண்மையில் ஆச்சரியம்தான்!"


நான் ஒன்று சொன்னால் தப்பாக நினைக்கமாட்டீர்களே!
அது ஒரு நிஜமான கதைதான்! என் நண்பி ஒருத்தியின்
கதை அப்படியே நீங்கள் எழுதிய கதை அது அவள்
நிஜக்கதையாக இருக்கிறதே!

அதில் நீங்கள் குறிப்பிட்ட அந்தக் கணவன் அவளைக்
கொடுமைப்படுத்தி பலாத்காரமாக அவளை அநுபவித்து
விட்டு "நீ ஆம்பிளைப் பிள்ளைதான் பெத்துக்கணும்!
பெம்பிளைப் பிள்ளையைப் பெத்தா தொலைத்திடுவேன்!
தொலைத்து" என்று அவளை அந்தக் கதாநாயகியை
அவள் கணவன் உதைத்துவிட்டுப் போனதுபோல்
என் நண்பியின் கணவனும் அத்தகைய
கொடுமையைச் செய்திருக்கிறான்!

உங்கள் அந்தக்கதை அப்படியே அவள் வாழ்க்கையைத்
தான் படம்பிடித்திருக்கிறது! அவள்கூட உங்கள் கதையைப்
பார்த்திருக்கிறாள். அதைப்பற்றி என்னிடம் கேட்டாள்!
நானும் உங்களைப் பற்றி எனக்குத் தெரிந்ததைக்
கூறியிருக்கிறேன்!" என்றாள் நித்தியா.

"அதுசரி நித்தியா! என்னைப்பற்றி உங்களுக்கு என்ன
வெல்லாம் தெரிந்திருக்கிறது! இன்றுதானே என்னுடன்
முதன்முதலாகப் பேசுகிறீர்கள்! அப்போ என்னைப்
பற்றி என்ன தெரிந்திருக்கிறீர்கள்! ம்.கூறுங்கள்!
நித்தியா! கூறுங்கள்!"

"நான் உங்கள் இரசிகை! உங்கள் கதைகள் கட்டுரைகள்
கவிதைகள் எல்லாவற்றையும் இரசித்துவருகின்ற
இரசிகை நான்! அதிலும் உங்கள் "பூர்வஜென்ம
புண்ணியம்" கவிதை வானொலி ஒன்றில் கேட்டு
அந்தக்கவிதைக்குள் நான் என்னைத்தொலைத்தது
உங்களுக்குத் தெரியாது!" என்றாள் நித்தியா.

"ஓ! அந்தக்கவிதையா! அதுகூட ஒரு எதேச்சையாக
வந்த கவிதைதான்! அது எழுதும்போது ஒரு நான்கரை
மணி அதிகாலை இருக்கும்! ஒரு கனவு கண்டு
எழுந்து அப்படியே அதைக் கிறுக்கிக்கொண்ட
ஒன்றுதான்! ஆனால் அது அந்த வானொலியில்
வந்தபின் எனக்குள்ளும் அந்தக் கவிதை ஓர்பாதிப்பை
ஏற்படுத்தியது உண்மைதான்! அதற்குள் எனக்கு
ஏதோ தொடர்பு ஒன்று இருப்பதாக நான் உணரக்
கூடியதாக இன்றும் இருக்கிறது நித்தியா!'


"ஓ! உஙகளுக்கும் அது இருக்கிறதா! அப்போ நான்
நினைக்கிறது சரிதான்! ம்...ம்...நான் ஒன்று கேட்கட்டுமா!
கேட்டால் கோபிக்கமாட்டீர்களே!" என்று சற்றுத்
தயக்கத்தோடு இழுத்தாள் அவள்.

"இல்லை! இல்லை! தயங்காமல் கேளுங்கள்! எந்த
வித கூச்சமும் வேண்டாம்! தயங்காமல் கேளுங்கள்!
தயங்காமல் கேளுங்கள் நித்தியா!"

என்று கூறினாலும் தனக்குள் "இவள் என்ன கேட்கப்
போகிறாளோ" என்று மனம் அடித்துக்கொண்டதை
அவள் அறியமுடியாதபடி சிரமப்பட்டு அடக்கிக்
கொண்டான் அவன்!

'இல்லை! வந்து...வந்து..உங்களுக்குத் திருமணம்
ஆகிவிட்டதா?."...என்று தட்டுத்தடுமாறினாள் அவள்.

"ஆமா! ஆமா! ஏன் கேட்கிறீர்கள்?" என்றான் ஒரு
அப்பட்டமான பொய்யை அவன் அவிழ்த்து விட்டதை
அறியாத அவள்

"இல்லை! சும்மாதான் ..சும்மாதான்..கேட்டேன்! பிள்ளைகள்
இருக்கிறார்களா?....எத்தனைபிள்ளைகள் என்று
அறிந்துகொள்ளலாமா?"..

"தாராளமாக! தாராளமாக!
இரண்டு பிள்ளைகள்! இரண்டு பெண்பிள்ளைகள்!"
என்று மீண்டும் ஒரு பெரிய பொய்யை அவிழ்த்து
விட்டான்! சரளமாகப் பொய்பேச வராதுதான்!
அந்த நேரம் எப்படித்தான் வந்ததோ! அவனுக்கே
ஆச்சரியமாக இருந்தது.

மறுமுனையில் சற்றுமௌனம்! "என்ன பேச்சைக்காணோம்!"
"இல்லை! இல்லை! உங்கள் மனைவி கொடுத்து வைத்தவர்!
அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்! நான் பின்பு
பேசுகிறேனே!"...என்று இழுத்தாள்!

"தாராளமாக! தாராளமாக! ஒரு விடயம்!
நான் உங்கள் இரசிகன் என்பது உங்களுக்குத்
தெரியுமா! நீங்கள்தான் வானொலியில் நன்றாக
கவிதை படிப்பீர்கள்! பாட்டுப் படிப்பீர்கள்!
அதையெல்லாம் நான் ஒலிப்பதிவு செய்து வைத்திருக்கிறேன்!
போட்டுக் காட்டவா!" என்றான் அவன்!

"என்ன! என் கவிதைகளா! அதையெல்லாம் பதிவு
செய்து வைத்திருக்கிறீங்களா! உண்மையாகவா!
எங்கே போட்டுக்காட்டுங்களேன்!" என்றாள் ஆர்வத்தோடு
அவள்.

"அதென்ன! நீங்கள் இரசிகையாக இருக்கலாம்!
நான் இரசிகனாக இருக்கக் கூடாதா! கவிதைபாடும்
நேரத்தில் நீங்கள் வரும்போது சட்டென்று பதிந்து
கொள்வேன்! பதிந்தபின்பு மீண்டும் மீண்டும் போட்டுக்
கேட்பதுண்டு! சும்மா சொல்லக்கூடாது! உங்கள்
குரலோடு அந்தக் கவிதை வரும்போது எவ்வளவு
இனிமையாக இருக்கிறது தெரியுமா!"என்றான் அவன்!

"சும்மா சொல்லாதீங்கள்! உங்களுக்கு எத்தனையோ
இரசிகைகள் இருக்கிறார்கள்! அப்படியிருக்க நீங்கள்
என் இரசிகன் என்னும்போது நம்பமுடியாமல் இருக்கிறதே!
நீங்கள் நல்லாய்ப் பொய் சொல்கிறீங்கள்! உண்மையாய்
என்கவிதைகளைப் பதிந்து வைத்திருக்கிறீங்களா.."
என்ற ஆர்வத்தோடு கேட்டாள்!

"ஆமாம்! ஆமாம்! எனக்குப் பொய்சொல்றதைத்தவிர
வேறு என்ன வேலை! அப்படியே ஒருநிமிடம் இருங்கள்!
வருகிறேன்!" என்று சொல்லிக்கொண்டே அவள்
கவிதையைப் போட்டு தொலைபேசியைக் கிட்டவைத்து
கேட்கவைத்தான்! அவன்!

"என்ன கேட்டாயிற்றா! இப்ப என்ன சொல்றீங்கள்!
இப்பவாவது நான் உங்கள் இரசிகன் என்று
ஒத்துக்கொள்வீர்களா! உங்களுக்குள் எவ்வளவு
திறமையிருக்கிறது தெரியுமா! நிட்சயமாய்
உங்களுக்குள் ஒளிந்திருக்கிற திறமையை என்றோ
ஒருநாள் உலகம் தெரிந்து கொள்ளத்தான் போகிறது!
வாழ்த்துக்கள் நித்தியா! வாழ்த்துக்கள் நித்தியா!
எனக்கு சற்று வெளியில் வேலையிருக்கிறது!
உங்கள் அழைப்பு எனக்கு நிறைஞ்ச சந்தோசம்
நித்தியா!" என்று அவசரக்கடமையழைக்க அவன்
அவசரப்பட்டான்!

"அப்போ நான் பின்பு அழைத்துப்பேசலாமா! உங்களுக்கு
நான் தொந்தரவு கொடுக்கிறமாதிரி இருக்காதுதானே!"
என்றாள் அவள்!

"ம்ஹம் ...ம்ஹம்...நீங்கள் நேரம் கிடைக்கிறபோதெல்லாம்
எடுத்துப்பாருங்க! நான் வீட்டில் இருந்தால் பேசுவேன்!"

"உங்கள் மனைவி உங்களுக்குத் தொந்தரவு கொடுக்க
மாட்டாவா! தப்பாய் நினைக்கமாட்டாவா..நான் வேறு
உங்களுக்குத் தொந்தரவாய் இருக்கக்கூடாது!
இல்லையா!"என்று ஏக்கத்தோடு அவள் கேட்டது
அவனுக்கு ஒருபுறம் சிரிப்பாகவும் மறுபுறம் அவளை
நினைக்கப் பாவமாகவும் இருந்தது!


சிரித்துக்கொண்டே "சரி!சரி! மனைவியிடம் என்னிடம்
பேசவேண்டும் என்று கூறுங்கள்! நான் நின்றால் அநேகமாக
நானே தொலைபேசியை றிஸீவ் பண்ணுவேன்!
நீங்கள் பயப்படும்படியாக ஒன்றும் இருக்காது!

அதுசரி! உங்களுக்கு யார் என்னுடைய தொலைபேசி
இலக்கத்தை தந்தது நித்தியா!என்று கேட்டான் அவன்!

"நீங்கள்தான் பெரிய எழுத்தாளராய்ச்சே! உங்கள்
தொலைபேசி இலக்கம் எப்பவோ எனக்குக் கிடைத்து
விட்டது! ஆனால் எனக்குத்தான் பயமாக இருந்தது!
நீங்கள் ஏதாவது நினைப்பீர்களோ என்று....
பலதடவை றிசீவரைத் தூக்கி டயல்பண்ணி றிங்
வரக்குமுன்னமே துண்டித்துவிடுவேன்! பயமாயிருக்க
அப்படியே வைத்திடுவேன்!"

"ஓ! ஓ! அது நீங்கதானா! அதுதானே பார்த்தேன்!
யாரடா எடுத்து எடுத்து கட்பண்ணுவது யாரடான்னு
பார்த்தேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக