செவ்வாய், 9 ஜூன், 2009

அவள் அப்படித்தான் (3)


"போய் வருகிறேன்!" என்றது மைத்துளி!

"புறப்படு மகனே!
உன்னுடைய பிரயாணம்தான்
என்னைப் பெருமைப்படுத்துகிறது!
நீ என்
இடுப்பை விட்டு இறங்கிய பிறகுதான்
எல்லாரும் என்னை
ஏறெடுத்துப் பார்க்கிறார்கள்!
நீ பாராட்டுப் பெறும்போதுதான்
எனக்கு
ஈன்றபொழுதை விடவும்
இன்பம் கிடைக்கிறது!"

என்று பேனா பேசியது!

மைத்துளி மறுபடியும் சொன்னது!

"என்னதான் இருந்தாலும்
உன்னைப்பிரியும்போது
என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை!
அதனால்தான் கண்ணீர்த்துளிபோலக் கசிகிறேன்!

எனக்கும் அப்படித்தான்!
உன் கடைசித்துளி
என்னைவிட்டுப் பிரியும் நேரத்தில்
குமுறலைத்தாங்க முடியாமல்
நான் கொட்டத் தொடங்குகிறேன்!" கவிஞர் மு மேத்தா

பிரிவும் பரிவும் வாழ்க்கையில்
இன்றியமையாத ஒன்றாகி
மனித மனங்களின் கண்ணீருக்கும் புன்னகைக்கும்
வழிசொல்லும் வடிகாலாகிவிடுகிறது!
இதுதான் வாழ்க்கையின் நியதி!
இதை மீறியவர்கள் யாரும் கிடையாது என்று அடித்துக்கூறலாம்!

அந்த வகையில்
அருணாவும் நித்தியாவும் விதிவிலக்கல்லவே!
இரு மனங்களுக்குள்ளும்
இணைபிரியாத இனம்புரியாத பாசம்
பற்றிக்கொண்டது இருவருக்கும் வியப்பே!

ஒரு மரத்தின் கனிகள்
எங்கெங்கோ பிரிந்து பதியம்போடப்பட்டு
செடியாகி மீண்டும் சந்தையில் சந்திக்கும்
வாய்ப்புக்கிடைக்கும்போது
ஒன்றையொன்று அறியாமல் பற்றிக்கொள்ளும் நிலைபோல்....

அந்த இருமனங்களுள்ளும்
விடைபுரியா விளக்கம்தெரியாத
பாச ஒட்டாகி இருப்பதை உணரும்போது
வியப்புத்தான் பதிலாகிறது!

அருணா! அவள்
செல்வச்செழிப்போடு வளர்ந்தவள்!
செல்வத்துள் மிதந்தாலும்
செல்வச்செருக்கில் சற்றேனும் மிதக்காதவள்!

"உன்னைப் போல்
உன் அயலானையும் நேசி!" என்ற தத்துவத்தை
தன் இரத்தத்தோடு இணைத்தவள்!

இரத்தம் சுத்தம்! அதனால் அவள்
இதயம் சுத்தம்! அதனால் அவள் அகமும் சுத்தம்!
அதனால் அவள் அழகின் மொத்தம்!

அற்புதமான அவள் அழகில்
சர்வமும் மயங்கும்! சொற்பதம் கொண்டு
வடித்திட முடிந்திடாத சிற்பமவள்!
பிரமன் படைப்புகளின் அதிசயங்களில் அவளும் ஒருத்தி!

அன்பாகப் பழகும் பண்புப் பிறவியவள்!
அதனால் அவள் பலரின் மனங்கவர் பிரியை!
கற்பதில் வல்லாள்! கவிதை சொல்வதில் வெல்வாள்!

பல இளையவர் கனவுக்கண்ணாள்!
ஆனாலும் அவள் இதயத்தையாரும்
வெல்லமுடியாத வில்லாள்!

பருவங்களின் தொல்லைகளால்
அலையடித்துச்செல்லாத நல்லாள்!
இயற்கையின் இரசனையின் பிரியையவள்!
அவள் சிரிப்பழகி! சீரழகி!

நித்தியா அவளைப்பார்த்ததும்
வியந்ததில் ஆச்சரியமில்லையே!
அவள் மனதில் ஏகப்பட்ட இனம்புரியாத மகிழ்ச்சி!
இப்படியும் நல்ல உள்ளமா! ஆச்சரியம்தான்! என்று
ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவளை...

"என்ன நித்தியா! என்ன சிந்தனை! வாங்க!
இப்போது இன்ரவல்! கொஞ்சம் வாக் போவோம்! என்றாள்!
"சரி வாங்க!" என்று புறப்பட்டாள் நித்தியா!

இருவரும் வகுப்பறையை விட்டுப் புறப்பட்டு
நடந்துவரும்வேளையில்....
இருகண்கள் அவர்களைத்
தொடர்ந்து துரத்திவந்துகொண்டே இருந்ததை
அந்த இருமனங்களும் கண்டுகொள்ள வாய்ப்பே இல்லை!

கேலியும் கிண்டல்களுமாய்....
ஆண்பெண் அரட்டையடிப்புக்களுக்கு
குறைவில்லாத "இன்ரவல் ரைம்"
கல்லூரியின் சகல பக்கங்களிலும்
ஆக்கிரமித்தவண்ணம் இருக்கையில்.....
இந்த இருமனங்களும் வாட்டர்பைப் நோக்கி
நடந்தவண்ணம் இருந்தன!

நீண்ட கியூ தண்ணீருக்காக காத்திருக்க
"நித்தியா! இந்தக்கியூ இப்போது குறையாது!
வாங்க நாங்க ஜஸ்கிறீம் குடிப்போம்!" என்றாள் அருணா!

"எனக்கு வேண்டாம் அருணா!
நீங்கள் வாங்கிக்குடியுங்கள்!" என்றாள் நித்தியா!
"நித்தியா நோ வ்வோமலிற்றி!
ப்பிளீஸ்! வாங்க!" என்றபடி...

"இரண்டு ஜஸ்கிறீம் பிளீஸ்!" என்றபடி
தன் பர்ஸில் இருந்து பணத்தை எடுத்துக்கொடுத்தாள் அருணா!

வறுமையில் வாடினாலும்
யாரிடமும் கடமைப்படாதவள் நித்தியா!
தனக்காக யாரும் செலவுசெய்வதை
அவள் விரும்புவதில்லை!

ஆனாலும்...
அருணாவை அவள் வேறு ஒருத்தியாக நினைப்பதற்கு
முடியாதபடி அவள்மனதில் இருத்திவிட்டாள்!
"எப்படி இதுசாத்தியம்"!

என்று ஆச்சரியமாக
சட்டென்று சிந்தனைக்குள் நுழைந்தவளை
"நித்தியா இந்தாங்க! குடியுங்க! அடிக்கடி சிந்தனையா...
என்னைப்பற்றியதா!...என்னடா முன்பின் தெரியாத இவள்
இத்துணைதூரம் அன்பாய் இருக்கிறாளே என்றா.....

எனக்கும் புரியவில்லை நித்தியா!
மற்றவர்களிடம் இல்லாத
இனம்புரியாத ஒன்று
நம்மிடம் இணைந்திருக்கிறது...

ஏதோ ஒன்று..புரியவில்லை....
எனக்கும் அதே சிந்தனையுண்டு நித்தியா.....
ஐ டோன்ற் நோ..கௌவ் இஸ் இற் பொஸிபிள்....
இற்ஸ் றியலி வொண்டவ்வுல்...
எனிகௌவ்...வி ஆர் லக்கி...தாங்ஸ் கோட்...".என்றாள்...அருணா...

இருவரும் ஐஸ்கிறீம் குடித்துக்கொண்டு
நடந்து வருகையில் தங்கள் பின்
வேறு இருகாலடி ஓசை தொடர்வதைக் கேட்டார்கள்....

திரும்பிப்பார்த்தவள் முதலில் நித்தியாதான்!
பார்த்தகண்கள் பார்த்தபடி ஸ்தம்பிதமாய் நின்றவளை....
அருணா தாங்கிப்பிடித்துக்கொண்டாள்.....

"அவள் அப்படித்தான்".....
வளர்வாள்...(எப்போது என்ற முணுமுணுப்பா..நியாயமானதுதான்...)

அன்புடன்
ஆதித்ததாஸன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக