செவ்வாய், 9 ஜூன், 2009

"அவள் அப்படித்தான்!" அத்தியாயம் (2)

"காலம் வரட்டும் பொறுத்திருங்கள்" என்று சொல்லித்
தொலைபேசியை வைத்துவிட்டு சென்றுவிட்டாள் நித்தியா!
அவள் மனதில் ஆயிரம் எண்ணங்கள் சுழன்றுவர,

"காத்திருங்கள்!" என்று சொல்லிய தன் கடந்தகால
சுழற்சிக்குள் அவளை திக்குமுக்காடச் செய்த அந்தச்
சம்பவம்...அவளையே நிலை குலைய வைத்த அந்த
அழியாத கோலம் மனத்தில் சுழன்றுவர...

படுக்கையில் விழுந்தாள் நித்தியா! அவள் விழுந்த
வேகத்தில் கட்டில் மெத்தை அவளைச் சற்றுத்தூக்கி
மேலே எறிந்து மீண்டும் அவளை ஏற்றுக்கொண்டது!

கண்களில் நீர்த்திவலைகள் மெல்ல மெல்ல ஊற்றெடுக்க
அவள் எண்ண ஓட்டம் இதயமதைக் கனக்க வைக்க
ஆறாய்த் தலையணை சட்டென்று நனைந்து கொள்ள

நினைவுகள் நீர்ச்சுழிகளாய் விரிந்தன....

பள்ளி வாழ்க்கைக்குள் அடிஎடுத்து அவள் எட்டாம்
வகுப்பை ஆரம்பிக்கவென கல்லூரிக்குள் தடம்பதித்தாள்
அன்று!
'கல்லூரி புதிது! ஆசிரியர்கள் புதிது! கூடப்படிக்கும்
மாணர்கள் யார் யார் எப்படியோ' என்ற கேள்வியோடு
கலந்த பயம் அவளை ஆக்கிரமிக்க,

தன்வகுப்பறையை நோக்கி மெல்ல மெல்ல
நடந்தபோது "ஹாய் நித்தியா!" என்ற குரல் கேட்டு
திகைப்புற்றுத் திரும்பியவளுக்கு அதிர்ச்சி!

என்னடா! முன்பின் தெரியாத ஒருவன் தன்னைப்
பெயர்கூறி அழைக்கிறானே! என்ற பயத்தில் பார்த்தவளை
'என்னை உங்களுக்குத் தெரிய நியாயமில்லைத்தான்!
ஆனால் உங்களை எனக்கு நல்லாய்த்தெரியுமே!"

என்று ஓர் விஷமப்புன்னகையோடு கிட்ட அவளுக்குக்
கிட்டவே ஒட்டிக்கொள்ளும்படி, நெருங்கிவிட்டான் அவன்!
அவளுக்கு உடம்பெல்லாம் வெயர்த்துக் கொட்டியது!
நடுநடுங்கியபடியே சட்டென விலகிக்கொண்டு

வேகம்வேகமாக வகுப்பறைக்குள் நுழைந்து
கொண்டாள் அவள்! 'அவன் வருகிறானா இல்லையா'
என்ற உணர்வைவிட 'வகுப்பறைக்குள் நுழைந்துவிட
வேண்டும்' என்ற உணர்வே அவளைத் துரத்திவந்து
வகுப்பறைக்குள் நுழைய வைத்துவிட்டது.

வந்த வேகத்தில் வகுப்பறைக்குள் நுழைந்தவளை
'ஹலோ மிஸ்!' என்ற குரல் சுயநினைவுக்குள்கொண்டு
வர ஆசிரியரின் அகங்காரமான குரல் மீண்டும் "நான்
ஒருத்தி இங்கே இருப்பது தெரியவில்லையா உனக்கு"

என்ற கேள்வி இன்னும் பயத்தை உண்டுபண்ண
வெடவெடத்துப் போனாள் அவள்!
" ஸொ...றி... மிஸ்" என்றுமட்டும் அவளால் தட்டுத்தடுமாறி
கூறமுடிந்தது.

"நீதான் நித்தியாவா?."..என்ற அதிகாரம் தொனித்த
குரல் அவளை இன்னும் நிலைகுலைய வைக்க
"யேஸ்.... மிஸ்" என்றாள் அவள்.

"என்ன! உனக்கு டிசிப்பிளின் தெரியாதா?..ம்..".
என்ற அதிகாரம் தொனித்த அந்த ஆசிரியரைப்பற்றி,
அவள் மனம் சட்டென்று எடைபோட்டுக்கொள்ள

இல்லை மிஸ்..நான் வரும்போது வழியில்...
என்று சொல்ல ஆரம்பித்தவளை

"ஆ..ஆரம்பிச்சுட்டியா...எல்லாரும் சொல்லுறமாதிரி
ஏதேன் சாட்டு வைச்சிருப்பீயே..சரி சரி..போ போ...
அங்கைபோய் இரு" என்று சுட்டிக்காட்டியபடி
நீங்கள் எல்லாம் படித்து என்ன நாட்டையே
ஆளப்போறீங்க...வந்துட்டாளுங்க.." என்ற முணுமுணுப்பு

அந்த ஆசிரியரின் பண்பில்லாப் பேச்சு
அவளை மேலும் நிலைகுலையவைக்க அவள்
மனத்திற்குள், "டிசிப்பிளினைப்பத்தி இவ பேசுறாவே!
என்ன டீச்சர் இவ...முதல்ல இந்தக் கொலிஜிலை
படிப்பிக்க இவவுக்கு என்ன தகமையிருக்கு!"

என்று மனத்திற்குள் அவள் மனம்ஓலமிட்டது!
இங்கிலீஸ் பள்ளிக்கூடம் என்று அப்பாவிடம் எத்தனை
கெஞ்சிக்கேட்டு இந்த அட்மிசனை எவ்வளவு கஸ்ட்டப்பட்டு
அவள் அப்பாவின் சிநேகிதரைப் பிடித்து சிபார்சு
செய்யச்செய்து பெற்றுக்கொண்டாள் அவள்!

"எப்படியாவது தான் தன் இலட்சியத்தில்
வெற்றிபெறவேண்டும்!" என்று எத்தனையோ கனவுகளை
சுமந்துவந்த அந்த வெள்ளை உள்ளம்

"நான் பிழையான இடத்திற்குத்தான் வந்து
விட்டேனோ! நல்ல கல்லூரி என்று எல்லோரும்
பேசிக்கொள்வதைக் கேட்டுத்தான் இங்கு வர மனத்திற்குள்
கோலம் போட்டிருந்தேன்! இங்கு எல்லாம் தலைகீழாக
இருக்கிறதே!" என்று தன் மனத்தின் கோலங்கள் அழிந்து
போய்விடுமோ! என்று பயந்து கொண்டது.

இத்தனைக்கும், அந்த வகுப்பறை மயான
அமைதியாக இருந்தது அவளுக்கு அதிசயமானதாக
இருக்கவில்லை அவளுக்கு! ஆசிரியரின் குணம்தான்
அவள் மனத்திற்குள் நன்றாகப் பதிந்துவிட்டதே!

தான் இன்று கல்லூரிக்குப் புறப்படும்போதே
எத்தனையோ தடங்கல்கள்! அப்பாவிற்கு எல்லாம்
செய்துவைத்து ஆயத்தப்படுத்தி சாப்பாடெல்லாம்
தயாராக மேசையில் வைத்துவிட்டு

"அப்பா! நான் போயிட்டுவர்றேன்! சாப்பாடெல்லாம்
மேசையில் எடுத்து வைத்திருக்கிறேன்! நேரத்துக்குச்
சாப்பிடுங்க!" என்று கூறும்போதே தந்தை தும்மியது
அவளுக்கு மட்டுமல்ல தந்தைக்கும் கஸ்ட்டம்
கொடுத்திருக்க வேண்டும்! குளியலை அரைகுறையோடு
முடித்துக்கொண்டு வெளியே வந்தவர்

"கொஞ்சம் பொறம்மா...கொஞ்சம் பொறுத்துப்
புறப்படு! சகுனம் சரியில்லைப் போலிருக்கு! கொஞ்சம்
பொறுத்துப் புறப்படு!" என்றவர்

சாமியறைக்குச் சென்றதுதான் தாமதம்
"நித்தியா! இங்கை ஓடிவாம்மா!" என்றதுதான்
விழுந்தடித்து ஓடியவள் தான் ஏற்றிவைத்த சாமி
விளக்கை அணையாமல் மறந்துவிட்டது எவ்வளவு
தப்பாய்ப் போய்விட்டது தெரிந்தது!

சாமிப்படத்தோடு இருந்த தன்தாயின்
படம் அரைகுறை எரிந்த நிலையில் தந்தையின்
கையில் இருந்தது தெரிந்தது!

தனக்கு உணர்வு தெரிந்த நாளிலிருந்து தான்
காப்பாற்றி இதுவரை வைத்திருந்த படம் எரிந்ததைக்
கண்டதும் அவள் துடித்துப் போய்விட்டாள்!

"என்னம்மா! நீ கட்டாயம் இண்டைக்கு
கொலிஜ்ஜுக்கு போகவேணுமா! நாளைக்குப்
போவேனம்மா! என்னவோ சகுனம் சரியில்லைப்
போலிருக்கு!."...என்று இழுத்தார் தந்தை!
தன்மகள் குணம் அவருக்குத் தெரிந்ததுதான்!

அவள் அம்மா மாதிரி அவள்! பிடிவாதக்
குணம் நிறையவே இருக்கு! "பிறக்கும்போதே
அம்மாவை அனுப்பியவள்" என்ற வெறுப்பேயில்லாமல்
இன்றுவரை தந்தைக்குத் தந்தையாய் தாய்க்குத்
தாயாய் இருந்து பக்குவமாய் வளர்த்து வந்தவருக்கு,
அவள் குணம் தெரியாமலா இருக்கும்!

சொல்லப்போனால் அவள் அம்மாவிடம்
அவருக்குப் பிடித்ததே அந்தப்பிடிவாதம்தானே..
எத்தனை கஸ்ட்டங்கள் அடிதடிகள் மத்தியில்
தன்சகோதரங்களைத் தாய்தந்தையைப் பகைத்து
தன்காதலைத் தன்மேல்கொண்ட காதலை வெற்றி
கொள்ள வைத்தவள்!

வசதிபடைத்த குடும்பத்தில் பிறந்து, தனக்காக
அத்தனையையும் தூக்கியெறிந்து "வாழ்ந்தால் அவர்
கூடத்தான்! இல்லையேல் எனக்கு வாழ்க்கையே இல்லை!
நான் காலம் பூராக் கன்னியாகவே இருப்பேன்! என்னை
யாரும் ஒன்றும் செய்யமுடியாது! உங்கள் உங்கள்
வேலையைப் பார்த்துப் போங்கள்!" என்று

எத்தனை அடம்பிடித்து அடிஉதைவாங்கி
கடைசியில் "யாருமே வேண்டாம்! வாங்க நாங்கள்
எங்காவது போய் வாழுவோம்!" என்று

உடுத்த துணியோடு மட்டும் வந்தவள்தான்!
அன்றிலிருந்து இருவரும் ஒரு ஓலைக்குடிசை
வாழ்க்கைக்குள் எவ்வளவு அன்பாய் அந்நியோன்னியமாய்
"தேனும் பாலும்போல நகமும் சதையும்போல" என்று
சொல்வார்களே அதுபோல வாழ்ந்து ஒரு குழந்தைக்கும்
தாயாகிப் பெற்றுப்போட்டு போய்விட்டவள்!

"எவ்வளவோ ஆசைகளைச் சுமந்து தன்
பிள்ளையைச் சுமந்தவள் சட்டென்று பொட்டென்று
பூவும் பொட்டோடும் போய்விட்டாளே!" என்று அந்த
நல்ல மனம் பசி தூக்கம் தொலைத்து பற்றுக்கள்
தொலைத்து தன் பிள்ளைக்காக தன்னைத் தொலைத்து
தன்பிள்ளையின் வடிவில் அவளைப்பார்த்து

தன்மனத்தைத் தேற்றிக்கொண்டது அந்த
நல்லமனம்! அன்றிலிருந்து இன்றுவரை 'தன் மகள்
தான்' என்ற வட்டத்திற்குள் இருந்து தன்மகளைப்
பற்றிய தன்மனைவியின் கனவுகளுடனேயே வாழ்ந்துவருகிற
நிலை மற்றவர்க்கு அதிசயம்தான்! இந்தக்காலத்திலும்
இப்படி ஒரு நல்ல ஆணா! என்று ஆச்சரியப்படாதவர்கள்
இல்லையென்றே கூறலாம்.

அத்தகைய நல்லமனம் தன் பிள்ளையை
தவிக்கவிடுமா! அதனால்தான் தன்னை விட்டுத்
தூரமாக இருக்கும் கல்லூரியில் படிப்பதற்கு அவளை
அநுமதிப்பதற்கு தயங்கியது என்பது சொல்லித்தான்
தெரியவேண்டும் என்பதில்லையே...

சட்டென்று தன் சுயநினைவுக்கு வந்தவர்
தன்மகள் பிடிவாதம் தெரிந்து "சரி சரி" கொஞ்சம்
பொறுத்துப் புறப்படம்மா! என்று கூறிவிட்டு தன்பணி
பார்க்கப் போனது!

அவளுக்கும் புரியும்! தன் தந்தை எவ்வளவு
தன்மேல் பாசத்தோடு சொல்கிறார் என்று! ஆனாலும்
இந்தக்காலத்தில் சகுனம் பார்த்தால் எதுவும் செய்ய
முடியுமா! என்று யதார்த்தமாக சிந்தித்தது!மனம்!

'இன்று கல்லூரி ஆரம்பம்! இன்றுவேறு
கல்லூரிக்குப் போகாமல் இருக்கமுடியுமா! அதுவேறு
ஆங்கிலப்பாடசாலை! வெள்ளைக்காரன் ஆரம்பித்த
கல்லூரி! அங்குபோய் சகுனம் பற்றிப் பேசமுடியுமா!'

என்று பலவாறு சிந்தித்துத்தான் "வாறது
வரட்டும்" என்று புறப்பட்டவள் பஸ்ஸையும் பிந்த
விட்டு ஒருவாறு வந்துசேர்ந்து விட்டாள்!

நுழையும்போதே அபசகுனம்மாதிரி
முன்பின் தெரியாதவனின் நாகரீகம் தெரியாத கீழ்த்தரத்
தன்மை கொண்ட செயல்! அதைத்தாண்டி வகுப்பறைக்குள்
ஆசிரியரின் நாகரீகம் கெட்ட அணுகுமுறை!

எல்லாவற்றையும் அவள்மனது எண்ண
எண்ண வெறுப்பு வந்து "விட்டு ஓடிவிடலாமா! படிப்பும்
மண்ணாங்கட்டியும்" என்று கணப்பொழுது நினைத்துக்
கொண்டது!

ஆனால் மறுகணம் தன்இலட்சியமான
'ஆங்கிலப்பட்டதாரி ஆசிரியர் ஆவேன்" என்ற எண்ணம்
சட்டென்று தைரியத்தைக்கொடுக்க

"எதையும் துணிந்து எதிர்கொள்ள வேண்டும்!"
என்ற துணிவு அவள் தாயின் எதிரொலியாக அவளுக்குள்
எழுந்து அத்தனை துயரங்களையும் தூக்கியெறிந்தது!

தனக்குள்ளே தன்னை நினைத்து ஆச்சரியப்
பட்டுக்கொண்டாள் அவள்! தன் தாயை மனத்தில்
நினைத்துவிட்டால் போதும் அவளுக்குள் புதுசக்தி
பிறப்பதை அவள் என்றுமே உணர்வாள்!

"ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே!
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!" என்ற
பாடலைத் தன்தாயே தனக்காகப் படிப்பதாக தன்
மனத்துக்குள் இருந்து படிப்பதாக உணர்வாள் அவள்!

அந்தத்தைரியம் அசட்டுத் துணிச்சல்தான்
இந்தச் சின்னவயதிலேயே அவளைத் தைரியமாக
இதுவரை வழிநடத்தி வந்திருக்கிறது என்பதை அவள்
உள்உணர்வு கூறிக்கொள்ளும்! மற்றது தந்தையின்
பாசம்! தனக்காக தன்னை உருக்கி வாழ்ந்தவண்ணம்
இருக்கும் தந்தையின் பாசம்!

இரண்டும் இல்லையென்றால் அவள்
எப்போதோ தொலைந்திருப்பாளே!...

சிந்தனையில் ஆழ்ந்திருந்தவளை கல்லூரி
மணிச்சத்தம் சுய நினைவுக்குக் கொண்டுவந்து தான்
கல்லூரியில் இருப்பதை நினைவுபடுத்தியது!

பக்கத்து இருக்கையில் இருந்த மாணவி
'நித்தியா! ஐ அம் அருணா!..கிளாட் ரு மீட் யூ.."
என்ற கைகுலுக்கல் அவளுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க

"அருணா! அந்த டீச்சர் அது என்ன அப்படி
நடந்து கொண்டாவே.. ரொம்ப்பப் பொல்லாதவவாய்
இருப்பா போலிருக்கே!..நீங்களும் இந்த ஸ்கூலுக்கு
நியூவா?.." என்று கேட்டவளை

"இல்லை நித்தியா! நான் கிறேட் வண்ணில்
இருந்து இந்தக் கொலிஜ்தான்! இந்த டீச்சர் ரொம்பப்
பொல்லாதவாதான்! கன்னா பின்னா என்று அடிகூடப்
போடுவா! கிறேட் செவண்ணில் நான் படிக்கும்போது
இவாதான் கிளாஸ்ட்டீச்சர் எங்களுக்கு!

இப்ப கிறேட் ஏய்ட்டுக்கு ஒன்லி இங்கிலீஸ்
சப்ஜெக்ட் இவதான்! இவ ரொம்ப்பப் பொல்லாதவாதான்!
எல்லாருக்கும் இவ என்றாப் பயந்தான் நித்தியா!

இந்தக் கொலிஜ்ஜிலேடியே "இவதான்
டிசிப்பிளின் தெரியாத டீச்சர்" என்று சொல்வாங்க..
ஆனா மற்றவங்க எல்லாரும் நல்லவங்க! டோன்ற்
வொறி நித்தியா!" என்றாள் அருணா.

"தாங்ஸ் அருணா! ஐ அம் றியலி வெரி
ஹப்பீ...ஐ லைக் யூ வெரி மச் அருணா"..என்று
சந்தோசத்தால் கண்களில் நீர்மல்க கட்டித்தழுவினாள்
நித்தியா!
'மீ ரு நித்தியா! ஐ அம் வெரி லக்கி!
நித்தியா! வீ ஆர் ப்விறெண்ட்ஸ்! ஓகே.."

"ஓகே..ஓகே......றைட் வீ வில் பீ ஹப்பீ!
யேஸ்! யேஸ்.'.....

அன்றைய நட்பு ஆரம்பம்.......அந்த
மனங்களை.....


(வளரும்)
அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3115&hl=

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக